ஈழத் தமிழர்

Wednesday, October 19, 2005

இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தல்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலைக்கு வரலாறு காணா வரவேற்பை 1954இல் யாழ்ப்பாணத் தமிழர் அளித்து, இலங்கையின் மன்னர் என நெடுந்தீவில் மகுடமும் சூட்டினர். மகிழ்ச்சியில் திளைத்த பிரதமர், கொக்குவில் இந்துக்கல்லூரியில் பேசுகையில் சிங்களமும் தமிழும் இலங்கையின் சமஅந்தஸ்து உள்ள ஆட்சிமொழிகளாகும் என அறிவித்தார். பின்னர், அவரது கட்சிக்குள்ளே அக்கொள்கைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. 1956 களனி மாநாட்டில் அவர் தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி, சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என அறிவிக்க, அவருடன் எச்ச சொச்சமாக இருந்த சாவகச்சேரி வி. குமாரசாமி போன்ற தமிழர் சிலரும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு நீங்கினர்.
1957இல் பிரதேச சபைகளை உருவாக்கித் தமிழருக்குச் சுயாட்சி வழங்கப் பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்பாடு ஏற்பட்டது. சிங்கள - புத்தத் தீவிரவாதிகள் உடன்பாட்டை எதிர்த்தனர். 1958 இல் ஒரு தலைப்பட்சமாக அந்த உடன்பாட்டை முறித்தார் பண்டாரநாயக்கா.
1965இல் டட்லி சேனநாயக்கா - செல்வநாயகம் உடன்பாடு ஏற்பட்டது. அதற்கமையத் தம் மாவட்டங்களில் தமிழரே தம்மை ஆட்சிசெய்யும் மாவட்ட சபைத் திட்டத்தை எழுதினர். சிங்கள தீவிரவாதிகள் எதிர்த்தனர். எதிர்த்த புத்த பிக்கு ஒருவரைக் காவலர் சுட்டுக் கொன்றனர். அதன்பின்னர் 1968இல் மாவட்ட சபைத் திட்டத்தை டட்லி சேனநாயக்கா கைவிட்டார்.
பிரித்தானியர் விட்டுச் சென்ற ஒற்றையாட்சிச் சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினரான தமிழருக்கு இருந்த பாதுகாப்பைத் தூக்கி எறியும் வகையில் 1972இல் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைப் பிரதமர் சிறீமாவோ கொண்டு வந்தார். சிங்களமே ஆட்சி மொழி, புத்தமே அரச மதம் எனத் தொடங்கிய அந்த அரசியலமைப்பை ஈழத் தமிழர் ஏற்கவில்லை. தமிழ்த் தலைவர்களான செல்வநாயகம், பொன்னம்பலம், தொண்டமான் ஆகிய மூவர் தலைமையில், 1976இல் யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையில் மாநாடு நடந்தது. தமிழ் ஈழத் தீர்மானம் அம்மாநாட்டில் நிறைவேறியது. 1977இல் நடந்த தேர்தலில் அத்தீர்மனைத்தை நடைமுறைப்படுத்துமாறு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஈழத் தமிழ் மக்கள் ஏகோபித்து ஆணையிட்டனர்.
சிங்களவருக்கு ஒரு மாநிலம்; தமிழருக்கு ஒரு மாநிலம்; இரு மாநிலங்களும் இணைந்த கூட்டாட்சி அரசாக நடுவண் அரசு; ஆகக் குறைந்த ஏற்பாடு இதுதான்; இந்த ஏற்பாட்டுக்குச் சிங்களவர் வர மறுத்தால், இலங்கைத் தீவில் இரு நாடுகளாகச் சிங்கள நாடும் தமிழ்ஈழ நாடும் அமைவதைத் தவிர வேறு வழியில்லை என 1949இல் தமிழரசுக் கட்சியின் தொடக்க நாளன்று தன் தலைமை உரையில் கூறியவர் செல்வநாயகம். பல்வேறு பேச்சுவார்த்தைகள் - போராட்டங்கள் மூலமாகச் சிங்களவருடன் அமைதித் தீர்வுக்கு முயன்று தோல்விகண்ட செல்வநாயகம், வில்லங்கமான காரியம் எனினும் தமிழ்ஈழ அரசை அமைப்பதைத் தவிரத் தமிழருக்கு வேறு அரசியல் எதிர்காலம் கிடையாது என்ற தீர்மானத்தை 1976இல் நிறைவேற்றினார்.
பிரித்தானியர் 1948இல் விட்டுச் சென்ற ஒற்றையாட்சிச் சோல்பரி அரசியலமைப்பு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையையும் குவிந்த அதிகாரங்கள் கொண்ட ஆட்சியையும் சிங்களவரிடம் கொடுத்ததால், தமிழர் இரண்டாந்தரக் குடிமகள் ஆனதால், ஒற்றையாட்சி முறை வேண்டாம், ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவம் வேண்டும் எனத் தமிழர் கோரினர்; கிடைக்காமல் போகவே கூட்டாட்சி அரசியலமைப்பைக் கோரினர்; அதற்கும் குறைந்த ஏற்பாடுகளான பிரதேச சபை, மாவட்ட சபை போன்றவற்றையாவது ஏற்கலாம் என்றனர். எதற்கும் சிங்களவர் உடன்படாததால் தமிழ்ஈழ அரசு அமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
57 ஆண்டுகளாக எதை ஏற்கமுடியாது எனத் தொடர்ச்சியாக ஈழத் தமிழர் கூறிவருகின்றனரோ, அந்த ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளே தீர்வு காணப் போவதாகப் பிரதமர் மகிந்த இராஜபக்சா கூறுகிறார், 2005 நவம்பர் 17இல் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். தேசிய உறுமல் கட்சியினரான புத்த பிக்குகளுடனும், இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணியினருடனும் உதிரிகளான 23 கட்சிகளுடனும் இதற்காகத் தேர்தல் உடன்பாடு கண்டுள்ளார். 1956இல் பண்டாரநாயக்கா ஏறிய சிங்களத் தீவிரவாதக் குதிரையில் 2005இல் மகிந்தா ஏறியுள்ளார். அன்று அத்தீவிரவாதிகளே பின்னர் பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றனர்.
22 தேர்தல் மாவட்டங்கள், 1.33 கோடி எண்ணிக்கையில் வாக்காளர்கள், இவற்றுள் 50%த்துக்கு அதிக வாக்குகளைப் பெற்றால் மட்டுமே ஒருவர் இலங்கையின் குடியரசுத் தலைவராகலாம். சிறுபான்மையினரின் வாக்குகளின்றிச் சிங்களவரின் வாக்குகளை மட்டும் பெற்று, 50%க்கு அதிகம் பெறலாம் என்பதற்குக் கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் சந்திரிகாவின் வெற்றி சான்று. நாடாளுமன்றத் தேர்தலாயிலென், குடியரசுத் தலைவர் தேர்தலாயிலென், தீவிரவாதக் கருத்துள்ள கட்சிக்கும் தலைமைக்குமே சிங்கள வாக்காளர் மீட்டும் மீட்டும் வாக்களித்து வந்தமை இலங்கையின் 57 ஆண்டு கால வரலாறு. இந்தத் தேர்தல் விதிவிலக்காகாது. இதுவே மகிந்தாவின் வியூகம். மகிந்தாவின் தந்தையார் பழுத்த அரசியல்வாதி, தென்னிலங்கையான உருகுணையைச் சேர்ந்தவர்.
மகிந்தாவை எதிர்த்துப் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கா, ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாட்சி போன்ற (மீண்டும் படிக்க: கூட்டாட்சி போன்ற) அமைப்புக்குள் அமைதித் தீர்வு காணப் போவதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கும் ஒற்றையாட்சியில் இருந்து வெளிவர முடியாத நிலை! ரணிலுக்குப் பின்னால் மலையகத் தமிழர் மற்றும் முசுலிம்களின் கட்சிகள் அணிவகுத்துள.
நிதான போக்குள்ள, அமைதியை விரும்பும் சிங்கள மக்கள், மலையகத் தமிழர், மற்றும் முசுலிம்கள் யாவரும் தமக்கு வாக்களிப்பர் என்ற நம்பிக்கை ரணிலுக்கு. அது மட்டுமல்ல, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பினரும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் விடுதலைப் புலிகளும் தம்மை ஆதரிப்பர் என ரணில் நம்புகிறார். விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதித் தமிழர், அண்மித்தாக உள்ள கொழும்பு அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்று வாக்களிக்கலாம். அந்த வாக்குகளையும் ரணில் நம்பி உள்ளார். கண்டியச் சிங்களவரான ரணில் செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர், ஜெயவர்தனாவின் உறவினர்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், கடந்த காலச் செயற்பாடுகளை வைத்துப் பார்க்கும் பொழுது, மகிந்தாவும் ரணிலும் ஒரே தன்மைத்தவர் என்பதில் ஐயமில்லை என்கிறார் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வ. விக்கினேசுவரன். அரசுப் படைசார் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என உறுதியளிப்பவருக்கு வாக்களிக்கத் தமிழர் தீர்மானிக்கலாம். யார் வெல்லவேண்டும் என்பதை விட, யாரை வெற்றியடைய விடக் கூடாது என்பதைத் தமிழர் தீர்மானிக்கவேண்டும் என்கிறார் விக்கினேசுவரன். இக்கூற்றை ஈழத் தமிழரின் நிலைப்பாடாகக் கொள்ளலாம்.
குர்து, சியா, சுன்னிப் பகுதிகளுக்குத் தனித்தனி ஆட்சி; இம்மூன்றும் இணைந்த ஈராக் கூட்டாட்சி; குர்துகளின் படையணியைக் கலைக்க வேண்டியதில்லை; இந்த அடிப்படைகளுடன் ஈராக்கில் புதிய அரசியலமைப்பு உருவாகியதைத் தமிழர் பலர் எடுத்துக் காட்டுகின்றனர். நோர்வேயின் முயற்சிகளுக்கு ஆதரவு என்கிறார் ரணில். நோர்வேயை வெளியேற்றிவிட்டு, இந்தியாவைத் துணைக்கு அழைக்க விரும்புகிறார் மகிந்தா.
ஜெயவர்தனா (1978-1988), பிரேமதாசா (1989-1993), விஜயதுங்கா (1993-1994), சந்திரிகா (1994-2005) என நான்கு குடியரசுத் தலைவர்களைத் தேர்ந்த சிங்களவர், ஐந்தாவது முறையாகக் குடியரசுத் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்க உளர். தேர்தல் பிரசாரத்திலும், வாக்குச் சாவடிகளிலும் வன்முறைக் கட்டவிழ்ப்பு இலங்கைக்குப் புதிதல்ல. அத்தகைய சவால்களையும் சந்தித்து, இலங்கையில் மக்களாட்சி தொடர இத்தேர்தல் வழிசெய்யும். ஆனாலும் ஈழத் தமிழரின் எதிர்காலம் வினாக்குறியாகவே தொடரும்.

0 Comments:

Post a Comment

<< Home