ஈழத் தமிழர்

Saturday, October 22, 2005

நயத்தக்கவரா? நயவஞ்சகரா?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
யாழ்ப்பாண அரசு தனி அரசு. கண்டி அரசு தனி அரசு. இரு அரசிருக்கைகளையும் இணைக்கும் நெடுஞ்சாலை இலங்கைத் தீவின் நெஞ்சறையை ஊடறுத்துச் சென்றது.
அந்தநெடுஞ்சாலைக்குத் தமிழர் பகுதியில் கண்டி வீதி என்று பெயர். சிங்களர் பகுதியில் யாழ்ப்பாண வீதி என்று பெயர். இவ்விரு அரசுகளும் இவ்விரு இனங்களும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் மதித்ததைக் காட்டும் கண்ணாடியே இப்பெயர் சூட்டலின் பின்னணி.
பிரித்தானியர் வந்தபின்பும் இப்பெயர் வழமையே தொடர்ந்தது. இன்றுவரை மக்களிடையே புழக்கமான பெயர்கள் அவைதாம். 1833இல் இரு இன மக்களையும் கலந்தாலோசியாமல் இரு தாயகங்களையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் அந்த நெடுஞ்சாலைக்கு இட்ட பெயர் ஏ9. பி.டபிள்யு.டி. எனப்படும் பொதுப்பணித்துறையினரின் பராமரிப்புப் பிரிவினரிடையே மட்டும் நீண்டகாலமாகவும் சுற்றுலாத்துறையினரிடம் அண்மைக் காலங்களிலும் புழக்கமான இப்புதுப்பெயரான ஏ9, இன்று சிங்கள - தமிழ் புரிந்துணர்வுப் பாலத்தை உடைக்க முயலும் பெயராகி உள்ளது.
ஏ9 என்ற பெயரைத் தந்திரமாகப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்குள் கொழும்பு அரசு புகுத்தியதன் நோக்கம் வெட்டவெளிச்சமாகி உள்ளது. சிங்கள ஆதிக்க எல்லைகளைத் தமிழர் தாயகத்துள் நீட்டும் மறைமுக முயற்சியாக ஏ9 பெயருக்குப் பின் ஒளிந்துகொண்டு உடன்பாட்டுக்குப் புதிய உரை எழுத முயல்கிறது கொழும்பு அரசு.
பொதுமக்கள் தங்கு தடையின்றி ஏ9 நெடுஞ்சாலையில் பயணிக்கப் புரிந்துணர்வு உடன்பாடு வழிசெய்துள்ளது. சிங்களப் பகுதியின் யாழ்ப்பாண வீதியிலும் தமிழ்ப்பகுதியின் கண்டி வீதியிலும் பொதுமக்கள் தங்குதடையின்றிப் பயணிக்கலாம் எனப் புரிந்துணர்வு உடன்பாட்டில் எழுதியிருந்தால் இந்தச் சிக்கல் வந்திராது.
எனினும் ஏராளமான பொதுமக்கள், -தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள்- இந்த நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் இப்போழுது சர்வ சாதாரணமாகப் போய் வருகின்றனர். கொழும்பின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கொழும்புச் சட்டங்களையும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவர்களின் சட்டங்ளையும் அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இவ்விரு கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருப்பதை உடன்பாடு மிகத் துல்லியமாகக் கூறுகிறது.
ஈழம்போக்குவரத்தைக் கொழும்பு அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நீட்டுங்கள். கொழும்பு அரசுப்போக்குவரத்தை விடுதலைப்புலிகள் கட்டுப் பாட்டுப்பகுதிக்குள் நீட்டுவோம். இது கொழும்பு அரசு சார்ந்தோர் வாதம். மிகத் தந்திரமான வாதம். சமவாய்ப்புக் கொடுப்பதான வாதம். இப்படிச் செய்யாவிட்டால் புரிந்துணர்வு உடன்பாட்டைப் புலிகள் மீறியதாகக் கொள்ளவேண்டுமாம்.
என்னை அண்மையில் சந்தித்த தமிழ்ப்பிரமுகர் ஒருவரும் இந்த வாதத்தின் `மதிப்பை` என்னிடம் கூறினார். பொதுமக்கள் தாண்டிக்குளம் மற்றும் எழுதுமட்டுவாள் சாவடிகளில் துயருறுவதை எடுத்துக்காட்டினார். பிரபகரனைச் சந்தித்த தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாதத்தின் `மதிப்பைப்` பிரபாகரனிடம் கூறியதாதக் தெரிவித்தார்.
பிடரியில் குதிக்கால் தொடப் பயந்தோடிய சிங்களச் சிப்பாய்கள், தம்மைத் தடுத்து ஆணையிட்ட மேலதிகாரிகளையும் சுட்டுவிட்டு ஓடினர். ஆக்கிரமிக்க விழைந்த தமிழ்ப் பகுதிகளில் இருந்து தப்பி ஓடினர். வன்னியையும் ஆனையிறவையும் மீட்டெடுக்கச் சில தமிழ்மாவீரர் மட்டுமே போதுமானதாக இருந்தது. பலஆயிரம் சிங்களச் சிப்பாய்கள் இறந்தனர், பல்லாயிரத்தினர் படுகாயமுற்றனர். பல்லாயிரக்கனக்கில் தப்பி ஓடியவர்கள் கொழும்பு அரசின் படையணியை விட்டே விலகிவிட்டனர்.
அந்த ஆக்கிரமிப்பை அப்போழுது படை கொண்டு முன்னெடுத்துச் செல்லமுடியாது படுதோல்விகண்ட கொழும்பு அரசு, இப்பொழுது தந்திரமாக ஏ9 போர்வைக்குள் மறைந்திருந்து கொண்டும், பொதுமக்கள் துன்பம் என்ற புதுப்பாதுகாவலனாகத் தன்னைச் சித்தரித்துக்கொண்டும், புலிகளுக்குச் சமவாய்ப்புத் தருவதான `மதிப்பளவுகோல்` கொண்டும், சிங்கள ஆதிக்க எல்லையை நீடிக்க முயல்கிறது.
முதலில் அரசுப் பேருந்துகளுக்கு உரிமை. தொடர்ந்து பயணிகள் தரிப்பிடம் கட்டும் உரிமை. கழிப்பிடம், புத்தகோயில், ஊழியர் தங்கும் வாடி கட்டும் உரிமை. கொக்கிளாய்க்கும் நாயாற்றுக்கும் பயணித்து அங்கு சிங்களவர் குடியேற்றங்களைப் புதுப்பிக்கும் உரிமை. இந்த `உரிமைகளின்` நீட்டமாக உளவுப் பிரிவின் ஊடுருவல். புலிகளின் கோட்டங்களை நோட்டம்விட வாய்ப்பு. கறுப்புஆடுகளை உள்ளே அனுப்ப வாய்ப்பு. ஒற்றைக்கூடாரத்துள் ஒட்டகம் தலையை நீட்டவிட்ட அரேபியரின் கதை புலிகளின் நெஞ்சறைக்குள் அரங்கேறும்.
கொழும்புத் தமிழர் சிலர் இந்த வாதங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். சாவடிகளைக் கடந்து போவது பொது மக்களுக்குத் `துன்பமாம்`. மக்கள் எதிர்ப்பைப் புலிகள் சமாளிக்க முடியாதாம். இக்கருத்தோட்டத்தைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் முன்னெடுத்துச் செல்கிறார்களே! தமிழ் மக்களுக்குக் கவர்ச்சியானதைப் புலிகள் செய்யவில்லையே என்கின்றனர் இவர்கள். திரைப்படமா நடக்கிறது கவர்ச்சி காட்ட? விடுதலைப் போர் முரசொலிக்கு ஊடே திசைதிருப்பும் கவர்ச்சிப் பண்களா? தமிழருக்கு எதிரிகள் வெளியே இல்லை.
கொழும்புக்கான இருப்புப் பாதையை வவுனியாவுக்கு அப்பால் போராளிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே மூடமுயன்றனர். 15 ஆண்டுகளாக அப்பாதையின் சுவடுகளே இல்லை. தமிழ்ப்பகுதியின் கண்டிவீதி மராமத்துப் பராமரிப்பின்றிக் கடந்த 20 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாக உள்ளது. எத்தனையோ பிள்ளைத்தாச்சிகள் இந்தப்பாதையில் வண்டியில் பயணிக்க முயல்கையில் பிள்ளைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். திருத்தினால், பராமரித்தால், வீதியாக்கினால் புலிகள் பயன்படுத்திவிடுவார்கள் என்ற நொண்டிச் சாக்கைச் சொன்னது கொழும்பு அரசு. அந்தப் பகுதிக்குள் கால்வைக்கவே அஞ்சியது கொழும்பு அரசு.
இன்று புரிந்துணர்வு உடன்பாட்டுப்போர்வைக்குள் மறைந்துகொண்டு தன் ஆதிக்க எல்லையைத் தந்திரமாக நீடிக்க முயல்கிறது.
நாற்பது ஆண்டுகள் நயத்தக்க நாகரீகர்களாக நடந்த தமிழ்த் தலைமையிடம் நயவஞ்சகம் காட்டிய அதே கொள்கையுடன் இன்றும் கொழும்பு அரசு `மதிப்பு அளவுகோல்` பீடிகை போடுகிறது. வெட்கம் என்னவென்றால் கொழும்புத் தமிழர் சிலரும் இந்த நயவஞ்சகத்துக்குத் துணைபோவதுதான். நயத்தக்கவருக்கு நயத்தக்கவராகவும் நயவஞ்சகருக்குக் கல்நெஞ்சராகவும் செயல்படக்கூடியவர்களையே தமிழ்மக்கள் தங்களின் ஒரே பிரதிநிதியாக இப்பொழுது கொண்டுள்ளனர். நோர்வே அரசு இதை நன்றாக உணர்ந்துள்ளது.
20 ஆண்டுகாலப் போரின் பெறுபேறாக, 45,000 சிங்கள விதவைகள், காணாமல்போன 20,000 சிங்கள இளைஞர், படையணிகளை விட்டோடிய 30,000 சிங்களவர், வறுமைக்கோட்டின் கீழ் அரைவயிற்றை நிரப்பவே துன்புறும் பல இலட்சம் சிங்களக் குடும்பங்கள் ஆகியோரின் அவல நிலையை நிமால்கா பெர்ணாந்து என்ன சிங்களப் பெண்மணி தமிழக வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் கொழும்பு அரசின் அதிகாரவர்க்கத்தினதும், தீவிரவாதச் சிங்களவர் சிலரினதும் தந்திரங்கள் எடுபடாது. சிங்களப் பகுதியில் யாழ்ப்பாண வீதியாகவும் தமிழ்ப்பகுதியில் கண்டிவீதியாவும் அந்த நெடுஞ்சாலையைக் கருத வேண்டும். சிங்கள - தமிழ் புரிந்துணர்வுக்கு அதுதான் ஒரே வழி.
அந்த நெடுஞ்சாலையில் எந்த வண்டியில், எவர், எந்தநேரத்தில், எவ்வாறு எங்கெங்கே போய்வரலாம் என்பதை அவ்வப்பகுதிக் கட்டுப்பாட்டாளர் தீர்மானிக்கட்டும். புரிந்துணர்வு உடன்பாட்டு ஆவணம் அதையே வலியுறுத்துகிறது.
ஏ9 நெடுஞ்சாலை என்ற பெயரும் அது தொடர்பான கொழும்பு அரசின் போக்கும், அந்த நயவஞ்சகத்தை உணராமல் நுனிப்புல்மேயும் கறுப்புஆடுத் தமிழர் கருத்தும் முகிழ்க்க முயலும் அமைதித் தீர்வுக்கு எதிரானவையே.

0 Comments:

Post a Comment

<< Home