அகதிகளுக்குப் பாதுகாப்பு ஓடை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
`பனையிலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாக ஈழத் தமிழ் அகதிகளின் சோக வரலாறு தொடர்கிறது. மன்னாரிலிருந்து புறப்பட்ட படகைக் கடுங்காற்று கவிழ்க்க, ஐந்து அகதிகள் கடலுள் கரைந்தனர் என்ற செய்தி வந்த ஒரு வாரத்தின் பின்னர், பயணிகளற்ற மன்னார்ப் படகு ஒன்று பாம்பனில் கரைசேர்ந்ததாகச் செய்தியும் வந்து, கொதி ஈயத்தைக் காதில் பாய்ச்சியது.
பஞ்சம், பட்டினியிலிருந்து விடுபடப் பொருளாதார அகதிகளாக எல்லை தாண்டி அசாம், திரிபுரா, மராட்டியம், தில்லி போன்ற இடங்களுக்குக் குடிபெயரும் வங்காள தேசத்தவரின் நோக்கமும் எண்ணிக்கை அளவும் கொண்டவர்களல்ல ஈழத் தமிழகதிகள்.
ஈழத்தில், தத்தம் ஊர்களில் இனிமேல் உயிருடன் வாழமுடியாது எனக் கருதி, இடம்பெயர்கின்றவர்களின் எண்ணிக்கையில் மிக மிகச் சிறுபான்மையினரே தமிழகத்தை நாடுகின்றனர். அவர்களுள் பலர், அன்றாடம் காய்ச்சிகள், வறுமைக் கோட்டின் கீழுள்ளோர்.
ஈழத்தின் மேற்குக் கரையோரத் தீவான மன்னாருக்கும் தமிழகத்தின் கிழக்குக் கரையோரத் தீவான பாம்பனுக்கும் 31 கிமீ. தூரக் கடலே இடைவெளி. இந்தக் கடலில் 20 கிமீ. இலங்கைக் கடல் எல்லைக்குள்; 11 கிமீ. இந்தியக் கடலெல்லைக்குள்.
மன்னார்த் தீவு முழுக்க முழுக்க இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி. அங்கே பேசாலை என்ற மீனவர் குடியிருப்பு. அங்குள்ள மீனவருக்கு மன்னார் - பாம்பன் கடலின் ஒவ்வொரு அங்குலமும் மனப்பாடமாகத் தெரியும். நகரும் மணல் மேடுகளான சேதுத் திடல்களின் காலவோட்ட நகர்வுகளும் தெரியும்.
தமிழகத்துக்கு அகதியாக வர விழைவோர் பேசாலை மீனவரின் துணையை நாடுவது வியப்பல்ல. தலைமன்னாரில் இலங்கைக் கடற்படைத் தளம், மண்டபத்தில் இந்தியக் கடலோரக் காவற்படையினர். இவர்களின் கண்காணிப்பை மீறிக் களவாகப் பேசாலையில் அகதிகளை ஏற்றவேண்டும், பாம்பன் தீவுக்கு அருகே இறக்கவேண்டும், படகுடன் பேசாலைக்குத் திரும்பவேண்டும். இந்தப் பணியை மனிதாபிமான அடிப்படையில் பேசாலை மீனவர்கள் செய்கின்றனர்.
காற்று மெல்ல வீசுகிறதே, புறப்படலாம் எனப் படகைப் பேசாலைக் கடலுள் இறக்குவார்கள், நடுக் கடலுக்கு வந்தபின், திடீரெனக் காற்றுப் பலமாக வீசத் தொடங்கும். தலைக்குமேல் நீர்வாரி இறைக்கும் அலைகள் படகைப் புரட்டும், சிலசமயம் படகு கவிழும். மீனவர் தம் படகையும் உயிரையும் பயணிகளுடன் சேர்ந்து இழப்பர்.
மனிதக் குவியல்களுடன் மீனவர் படகா? இலங்கைக் கடற்படையின் கழுகுக் கண்களுள் விழுந்தால் போதும், கடற்படைப் படகு நெருங்கும், பேசாலை மீகாமனும் படைவீரரும் சிங்களத்தில் பேசுவர், பேரம் சரிவரின் பணம் கைமாறும், பயணிகள் தப்புவர். பேரம் சரிவராவிடின் படகும் பயணிகளும் கைதாவர். தலைமன்னாருக்குப் போய் சிறைகளில் வாழ்க்கை. இழப்பு மீனவருக்கே!
இந்தியக் கடலெல்லைக்குள் கடலோரக் காவற்படையின் ரேடார் வலைக்குள் அகப்பட்டால் போதும், ஹெலிகொப்டர் வானில் தெரியும், படகையும் பயணிகளையும் பாம்பனுக்கு நெருக்கி அணைப்பர். தமிழகக் காவல்துறை படகைக் கைப்பற்றும், பேசாலை மீனவர் சிறையில், பயணிகள் அகதி முகாமில்!
இலங்கைத் தீவோ கொதிக்கும் கொப்பறை. சேதுக் கடலும் தமிழகக் கடலோரமும் எரியும் நெருப்பாகலாமா? போரில் கொடுமையைத் தாண்டி உயிர் தப்பினோம் என்ற பெருமூச்சு வரமுன்பே தமிழகக் கடலெ்லைக்குள் மீண்டும் கொடுமைகளா? கொதிக்கும் கொப்பறைக்குள் இருந்து தப்பி எரிதழலுள் விழுவதா?
இந்தியக் கடலெல்லைக்குள்ளே, அகதியாக வருவோருக்கும், கொண்டு வரும் படகுகளுக்கும் ஏற்படும் துன்பங்களைப் போக்கவேண்டய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு உண்டு.
பாம்பன் தீவின் கிழக்கு முனையில் இருந்து 11 கிமீ. வரை இந்திய எல்லை. இந்த எல்லைக்குள், முதலாம் திடல் (தீடை), இரண்டாம் திடல் மூன்றாம் திடல் எனப் பெயர்கொண்ட நகரும் திட்டுகள், வாடைக் காலத்தில் நீர்மட்டத்தின் கீழ் மறைந்து, கோடையில் தெளிந்த நீரில் சிறு பரப்புகளாகித் தொடரும் இந்தத் திடல்களருகே, முழங்காலளவு ஆழநீரில் அகதிகளை இறக்கியபின் பேசாலைப் படகுகள் விரைந்து மறைந்துவிடும்.
தமிழக மீனவர்களோ, இந்திய கடலோரக் காவற்படையோ கண்டு மீட்கும்வரை இவ்வகதிகள் அத்திடல்களில் காத்திருப்பர்.
சேதுத் திடல்களுக்கு வடக்கே, தனுஷ்கோடிப் பழைய இறங்குதுைறையிலிருந்து 15 கிமீ. நீளும் இந்திய எல்லைக்குள், பாதுகாப்பு ஓடை அமைத்து, பேசாலையிருந்து வரும் அகதிகளுக்கும் படகுகளுக்கும் நம்பிக்கையையக் கொடுக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு உண்டு. இரண்டு அல்லது மூன்று கடலோரக் காவற்படைப் கப்பல்கள் 24 மணிநேரமும் இந்தப் பாதுகாப்பு ஓடைக்கு அரணாக நின்றால், உண்மையான அகதிகள் தஞ்சமென வருகையில் நெஞ்சம் குளிர்வர்.
அகதிகளைக் கொண்டுவரும் படகுகளைக் கைப்பற்றி, மீகாமான்களைச் சிறையில் அடைப்பது கொடுமை. மனிதாபிமான நோக்குடன் குறைந்த செலவில் நிறைந்த இழப்புகளுக்குத் தம்மை ஆளாக்குவோருக்கு மனிதாபிமானம் தரும் பரிசு இதுவா?
பிரசவத்துக்கு இலவசமாகப் போகும் ஆட்டோ, விபத்தில் காயமுற்றவறை ஏற்றிவரும் கார், நடுக் கடலில் எந்திரம் பழுதடைந்த படகை இழுத்துவரும் சக மீனவரின் படகு, இப்படி எத்தனையோ எடுத்துக் காட்டுகள். இவர்களைப் போன்றவரே பேசாலை மீனவர்; ஆபத்துக்கு உதவப்போய் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்களே!
24 மணிநேரப் பாதுகாப்பு ஓடை அமைத்து உண்மை அகதிகளுக்குத் தஞ்சமளிப்பதும் பேசாலை மீனவரின் படகுகளைக் கைப்பற்றாமல் திருப்பி அனுப்புவதும் இந்திய அரசின் தார்மீகக் கடமைகள்.