ஈழத் தமிழர்

Saturday, June 30, 2007

இலங்கையைத் தகர்த்தெறியும் சிங்களவர்

ஒன்றுபட்ட இலங்கையைத் தகர்த்தெறியும் சிங்களவர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
அமைச்சர் திசா விதாரணரை உடயடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே. வி. பி.) பொதுச் செயலாளர் விமல் வீரவன்ச கோரியுள்ளார். அவ்வாறு அவரை நீக்காவிட்டல் சிங்களவரிடையே சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வலுத்துவிடும் எனவும் விமல் வீரவன்ச அச்சுறுத்தியுள்ளார்.
தமிழருக்கு அதிகாரப் பரவலாக்கம் போதுமான அளவு கொடுக்கவேண்டும் எனத் திசா விதாரணர் கூறியமையே இந்த அச்சுறுத்தலுக்குக் காரணம். ஒற்றையாட்சிக்கு வெளியே எந்தத் தீர்வையும் காணக்கூடாது என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நிலை. இந்த நிலையையே தேர்தல் அறிக்கையாக இராஜபக்சாவும் சிங்கள மக்களிடையே மகிந்த சிந்தனையாக முன்வைத்துக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். சில வாரங்களில் தீர்வுப் பொதியை முன்வைக்கவேண்டிய கட்டாயம் இராஜபக்சாவுக்கு உண்டு. மேலை நாடுகளும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இராஜபக்சாவை எச்சரித்து வருகின்றன. படை வலிமைப் பெருக்கத்தால் அல்லது போரில் வெற்றியால் இலங்கையில் இனச் சிக்கலுக்குத் தீர்வு இல்லை என்பதையே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இராஜபக்சாவுக்கு எடுத்துரைத்து வருகின்றன.
சிங்களவரிடையே, விக்கிரமபாகு கருணரத்தினா, குமார் ரூபசிங்க போன்ற பலர், போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஏதாவது ஒரு அரசியல் தீர்வுக்கு வருமாறு இராஜபக்சாவுக்கு எடுத்துக் கூறுகின்றனர். போருக்கு எதிராகச் சிங்கள மக்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர்.
போருக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என இராஜபக்சா அரசு குற்றம் சாற்றிவருகிறது. போருக்கு எதிரான கருத்துகளைச் சிங்கள நாளேடுகளில் எழுதிய சிங்களவரான இதழாளர் மூவரைக் கடத்திச் சென்றுள்ளனர் அரச ஆதரவாளர். சில வாரங்களாகவே அவர்களின் இருப்பிடத்தை எவராலும் அறிய முடியவில்லை.
இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அமைதித் தீர்வுப் பொதி ஒன்றைக் கூட்டாகத் தயாரிப்பதற்காக, அரசுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி, அந்த உடன்பாட்டிலிருந்து பின்வாங்கி உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படிப்படியாகப் பிரித்தெடுத்து ஆளும் கட்சியில் சேர்த்துவரும் இராஜபக்சாவின் நடவடிக்கையை எதிர்த்தே ரணில் இவ்வாறு பின்வாங்கினார்.
இவ்வாறு பிரித்தெடுத்ததால், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் பெருகி உள்ளது. தனிப்பெரும்பான்மையை ஆளும் தரப்பினர் பெற்றுள்ளனர். ஆனாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இன்றி, அரசியலமைப்பைத் திருத்த முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்ததால், தேர்தலில் தம்மை ஆதரித்து வெற்றி பெறச் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபடலாம் என இராஜபக்சா நினைக்கிறார். மேலைநாடுகளும் அமெரிக்காவும் இதில் இராஜபக்சாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. தனிப்பெரும்பான்மையைப் பயன்படுத்தி, விரைவில் அரசியல் தீர்வுப் பொதியை முன்வைக்குமாறு இராஜபக்சாவை மேலைநாடுகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
சொற்களை வைத்துச் சிக்கலை நீடிக்கவேண்டாம். ஒற்றையாட்சி, கூட்டாட்சி என்ற சொற்களே தேவையில்லை. அரசியல் தீர்வே தேவை. இவ்வாறு இந்தியாவிடமும் மேலை நாடுகளிடமும் இராஜபக்சா கூறிவருகிறார். இலங்கை மக்கள் அனைவரும் ஏற்கக் கூடிய தீர்வாக, இலங்கையில் தயாரிக்கும் தீர்வு ஒன்றுக்கு முயல்வோம் என்ற அவரது நிலைக்குப் போதுமான ஆதரவு எங்கும் எந்தச் சிங்களக் கட்சியிடமிருந்தும் வராததால், இராஜபக்சா போரைத் தொடர்கிறார்.
தெற்கத்தைய கருத்தொற்றுமைத் தேடலில், சிங்களவரிடையே கருத்தொற்றுமையை உருவாக்க முடியாததால் கடந்த 60 ஆண்டுகளாகப் புரையோடிய புண்ணாகச் சிங்கள-தமிழ் இனச் சிக்கல் தொடர் கதையாகி நீள்கிறது.
1957இன் பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்பாடு முறிய ஜெயவர்த்தனா காரணர். 1965இன் டட்லி - செல்வநாயகம் உடன்பாடு முறிய சிறீமாவோ காரணர். 1987இன் இந்திய - இலங்கை உடன்பாட்டைப் பிரேமதாசா எதிர்த்தார், இராஜபக்சே முறித்தார். 2002இன் ரணில் - பிரபாகரன் உடன்பாடு செயற்படாதிருக்குமாறு சந்திரிகாவும் மகிந்தா இராஜபக்சாவும் பார்த்துக் கொள்கின்றனர். ஒற்றையாட்சிக்கு வெளியே தீர்வு அமையாதவாறு மக்கள் விடுதலை முன்னணியினர் காவல் காக்கின்றனர். அதிகாரப் பரவலாக்கம் தேவை என்று குரலெழுப்பிய அமைச்சர் திசா விதாரணரைப் பதவி விலகக் கோருகின்றனர். எனவே தெற்கத்தைய ஒற்றுமை கானல் நீரே!
பிப்ருவரி 22, 2007 சிங்களவருக்கு எட்டிக் காயாய்க் கசக்கிறது. ரணில் - பிரபாகரன் உடன்பாடு எட்டி 5 ஆண்டுகள் ஆகும் நாள் அன்றுதான். ஒரு பிரதேசத்தைத் தம் ஆட்சியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு வைத்திருந்தால், அந்தப் பிரதேசத்தினர் தனிநாட்டுக்கு உரிமை உடையர் என்ற மரபு கிழக்குத் திமோரில் நடைமுறைக்கு வந்ததாகப் பரவலாகத் தம்மிடையே பேசிக்கொண்டு, அந்த நாளைக் கரிநாளாகப் பார்க்கச் சிங்களத் தீவிரவாதிகள் தொடங்கியுள்ளனர். ரணில் - பிரபாகரன் உடன்பாட்டை முறித்தெறிய வேண்டுமென்ற உரத்த குரலுடன் பிக்குகள் கொழும்பில் தொடர் உண்ணா நோன்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போரட்டத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியின் நேரடி ஆதரவும் உண்டு.
சிங்களவரின் இந்த உளநிலையை உளத்திருத்தியே, தன்னாட்சி அதிகாரத்துக்கான இடைக்கால அமைப்பு ஆலோசளைகளைத் தமிழர் 2002இல் முன்வைத்தனர். அந்த ஆலோசனைகளைச் சிங்களவர் எப்பொழுதும் பரிசீலிக்கவே இல்லை. இடைக்கால அரசியல் தீர்வுக்கான இந்த ஆலோசனைகள், இலங்கையை ஒரே நாடாகக் கணிப்பன. அங்கே தமிழருக்குத் தன்னாட்சிப் பகுதியை நிலை நிறுத்துவன. உலக நாடுகள் பலவற்றில் இத்தகைய சிக்கல்கள் விட்டுக் கொடுப்புகளாலேயே தீர்ந்துள்ளன.
மாவோயிஸ்டுகள் நேபாளத்தில் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பி, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பொழுது மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்வதற்காக, அதுவும் நேபாளத்தைப் பல் இனங்களின் கூட்டாட்சி அமைப்பாக மாற்ற உடன்பட்டுள்னர். நேபாளத்தின் தெராய்ப் பிரதேச மக்களின் வேண்டுகோளை ஏற்றுக் கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கப் போவதாக மாவோயிஸ்டுகளும் பிரதமர் கொய்ராலாவும் சேர்ந்து அறிவித்துள்ளனர். ஆயுதக் களைவுக்கு மாவோயிஸ்டுகள் உடன்பட்டனர். மன்னராட்சி அங்கு முற்றாக நீக்கப்படவுள்ளதே இதற்கு முதற்காரணமாகும்.
வடக்கு அயர்லாந்தில் அயர்லாந்துக் குடியரசுப் படையினர் ஆயுதக் களைவுக்கு உடன்பட்டமைக்கு, அவர்களை எதிர்க்கும் யூனியனிஸ்டுகளின் விட்டுக் கொடுப்பே காரணமாகும். மக்களாட்சியுள்ள தன்னாட்சி அரசு வடக்கு அயர்லாந்தில் அமைய உள்ளது. 7.3.2007இல் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆச்சரியமென்னவென்றால் எதிரும் புதிருமாக இருந்த குடியரசுக் கட்சியனரும் யூனியனிஸ்டுகளும் ஒரே கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 26.3.2007இள் அரசு அமையவில்லை எனில், பிரித்தானியா மற்றும் அயர்லாந்து அரசுகள் இணைந்து வடக்கு அயர்லாந்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்.
ஐரோப்பிய ஒன்றியம் வலுப்பெற, அதற்கான தனி நாணயம் தேவை எனத் தீர்மானித்த பின்னர், யூரோ நாணயம் புழக்கத்தில் வந்தது. பிரித்தானியாவைத் தவிர ஏனைய உறுப்புரிமை நாடுகள் யூரோவைத் தம் நாணயமாக்கின. ஆனாலும் யேர்மனியின் பேர்லின் நகரத்தவர் சிலர், தமக்குத் தனி நாணயம் வேண்டுமெனத் தீர்மானித்து, பெர்லினர் நாணயத்தைப் புழக்கத்தில் விட்டுள்னர். யூரோ நாணயத்தால் ஒன்றுபட்ட ஐரோப்பாவில், இத்தகைய நாணயப் புழக்கங்களுக்கு, தன்னாட்சி முயற்சிகளுக்கு இடமுண்டு. விட்டுக் கொடுப்பே காரணம்.
சிங்களவர் விட்டுக் கொடுக்காததால், இறைமையும் தன்னாட்சியும் உடைய நாடாகத் தமிழீழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனத் தமிழர் தரப்பில் 1976இன் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தின் பின்னர் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்கு எதிரானவர் சிங்கள புத்த இனவெறி முன்னெடுப்பாளர்களே. அவர்கள் விட்டுக் கொடுத்தாலன்றி இலங்கையில் அரசியல் தீர்வு வராது.

1 Comments:

  • அன்புக்கும் மதிப்புக்குமுரிய சச்சி அண்ணாவுக்கு, இன்றுதான் உங்கள் பதிவுகளைப் பார்த்தேன்!
    முடிந்தால் உங்கள் தொலைபேசி இலக்கத்தை அனுப்பிவையுங்கள்.

    By Blogger தங்க முகுந்தன், at 12:52 AM  

Post a Comment

<< Home