ஈழத் தமிழர்

Tuesday, October 25, 2005

தமிழ்நாட்டில் ஈழத்தடயங்களின் மீளுருவாக்கம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கங்கைக் கரையில் காசிவிசுவநாதர் விசாலாட்சியுடன் இருக்கிறார். அங்கு போய் நேரில் வழிபடமுடியாதவர்கள்,தமிழ் நாட்டிலேயே தமது ஊர்களுக்கு காசியைச் சேர்த்த பெயரை வைத்து வழிபட்டுக் கொள்வார்கள். அவற்றுட்சில, சிவகாசி,தென்காசி,காசிதர்மம் என்ற தமிழ் நாட்டு ஊர்கள்.
சிங்கள இன வெறி தாக்குதல்களால் கதிர்காமத்திற்குப் போக முடியாதவர்கள யாழ்ப்பாணத்தின் நல்லூரில் கதிர்காமத் திருவிழா கொண்டாடுவர்.
மார்கழியில் யாழ்ப்பாணக் காரைதீவில் மாதம் முழுவதும் திருவிழா. அங்கு, ஈழத்துச் சிதம்பரக் கோயிலல் பாடும் திருப்பள்ளிஎழுச்சியும், திருவெம்பாவையும் தில்லையில் கூத்தப் பெருமானுக்கே கேட்குமாம். இலங்கை அரசின் தடைகளைத் தாண்டி, தமிழ் நாட்டில் சிதம்பரத்திற்குப் போகமுடியாதவர்கள் மார்கழி முழுவதும் ஈழத்துச் சிதம்பரத்தில் கூடுவார்கள்.
தில்லைச்சிற்றம்பலம் ஈழத் தமிழரின் நெஞ்சங்களில் நிறைந்த கோயில். யாழ்ப்பாணத்துச் சைவர்களுக்குச் சிதம்பரம் தாய்வீடு.
காங்கேயன்துறைக்கும் திருமறைக்காட்டுக்கும் இடையேயுள்ள கடலைக் கடந்து பாய்மரக் கப்பல்கள் பயணித்த காலங்களில் யாழ்ப்பாணத்தவர் அடிக்கடி சிதம்பரம் போவர். தில்லைக் கூத்தனை வழிபடுவர். திரும்பி யாழ்ப்பாணம் வருவர்.
இப்புனிதப் பயணமரபு நெடுங்காலம் தொடர்வது. வழி வழியாக அடி தவறாமல் யாழ்ப்பாணத்தவர் சிதம்பரம் போய் வருவதை நெறியாகக் கொள்வர்.
யாழ்ப்பாணக் குட நாடு முழுவதும் தில்லைத் திருக்கோயிலுக்குச் சொந்தமான காணிகள் ஏராளமாக உள்ளன. ஆண்டுதோறும் தில்லைவாழ் அந்தணர் சிலர் யாழ்ப்பாணம் வருவதும் அக்காணிகளின் வருமானத்தைத் திரட்டுவதும், தில்லைக்கு எடுத்துச் செல்லுதலும் தொன்றுதொட்டு வரும் மரபு.
தில்லைத் திருக்கோயிலைச் சுற்றிய வீதிகளில் யாழ்ப்பாணத்தார் தங்குவதற்காகக் கட்டிய மடங்கள் நெடுங்காலமாக உண்டு. ஞானப்பிரகாசர் குளத்தை ஒட்டிய திருவீதியில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட மடங்கள் உள்ளன.
ஒவ்வொரு மடத்திற்கும் ஒவ்வொரு பெயருண்டு. கொக்குவிலார், கொக்குவில் மடத்தில் தங்குவர். காரைநகரார், காரைநகர் மடத்தில் தங்குவர். பல்வேறு குழுக்கள் சார்ந்த மடங்களாக அவை அங்குண்டு. கடந்த முப்பது ஆண்டுகளாக இம்மடங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாடு அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. சிதம்பரப் பயணங்கள் தடைபட்டு விட்டன. இந்தச்சூழல் சிதம்பரத்தின் சமூக விரோதிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. பல மடங்கள் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. சில மடங்கள் தொடர்பாக வழக்குகளும் உள்ளன.
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபைக்குச் சிதம்பரத்தில் நிலங்கள் உள்ளன. சபையின் புண்ணிய நாச்சி அறக்கட்டளைக்கு சிதம்பரம் மாலைகட்டித் தெருவில் மடம் உள்ளது. நாற்சார வீடாக அமைந்த அந்த மடம் கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படாமலேயே இருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து சிதம்பரம் செல்பவர்கள் தங்குவதற்கான வசதிகள் அரிதாகின. யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபைச் செயலாளராக இருந்தவர், கரம்பணனச் சேர்ந்த திரு. சண்முக லிங்கம். கரம்பன் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த அவர் யாழ்ப்பாணத்தின் தொழிலதிபர்களுள் ஒருவர்.
கடந்த இருபது ஆண்டுகளாக யாழ்ப்பாணம் உருக்குலைந்த நிலையில், திரு. சண்முகலிங்கம் சிதம்பரத்திற்கு அடிக்கடி வந்தார். நடராசப் பெருமானை வழிபட்டார். புண்ணியநாச்சி அறக்கட்டளை மடத்தின் சீர்கேட்டைப் பார்த்தார். தனக்குத் தெரிந்த ஈழத்துத் தொழிலதிபர்களை அழைத்தார். சிதம்பரத்திலுள்ள புண்ணியநாச்சி மடத்தின் பழைய கட்டிடத்தை இடிக்க வேண்டும். புதிய அறைகள் கட்டவேண்டும் எனத் திட்டம் தீட்டினார்.
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை இவரது திட்டத்தை ஆதரித்தது. ஈழத்தொழிலதிபர்களிடம் இவருக்கு ஆதரவு தந்தனர். நான்கு ஆண்டுகளாக இடைவிடாத முயற்சி செய்த திரு. சண்முகலிங்கம் பல அறைகளும், தங்கு கூடமும், கழிப்பறைகளும், குழியலறைகளும் கொண்ட நவீன மடம் ஒன்றை அமைத்தார்.
2002 ஜுன் 2 ஞாயிற்றுக்கிழமை புண்ணியநாச்சி அறக்கட்டளையின் சிதம்பரம் மடத்தின் திறப்பு விழா கோலாகாலமாக நடந்தது. சிதம்பரம் நகராட்சி மன்றத் தலைவர் தலைமை தாங்கினார். யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் அறக்கட்டளையின் சிதம்பரத் தலைவரும் அறங்காவலரும் கலந்து கொண்டனர். சிதம்பரம் நகரத்தின் முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். நடராசப் பெருமான் அருள்பெருக்க, ஈழத்து அடியவருக்காகப் புண்ணியநாச்சி மடம் சிதம்பரத்தில் மீளுருவாகிப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஈழத் தமிழர், தமிழ் நாட்டில் தமக்குரிய பாரம்பரியங்களை மீள அமைப்பதில் திரு. சண்முகலிங்கம் முதலடியை எடுத்து வைத்துள்ளார்.
சென்னையில், திருவண்ணாமலையில், சிதம்பரத்தில், திருமறைக்காட்டில், கோடைக்கானலில், மதுரையில், திருச்செந்தூரில், இராமேச்சரத்தில் ஈழத் தமிழருக்கு ஏராளமான அறக்கட்டளைசார் சொத்துகள் உள்ளன.
கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கை-இந்தியப் பயணங்களில் ஏற்பட்ட தடைகள், இடையூறுகள் ஈழத் தமிழர் இந்தச் சொத்துக்களை ஆட்சி செய்ய முடியாமல் தடுத்தது. இதனால் தமிழ் நாட்டிலுள்ள சிலர் இச்சொத்துக்களின் மீது உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி ஆதீனத்தின் ஆட்சியின் கீழ் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகத் திருமறைக்காடு திருக்கோயில் உள்ளது. ஈழத்தவர் ஆட்சியை மாற்றித் தமிழகத்தவரிடம் திருமறைக்காடு திருக்கோயிலின் ஆட்சியைக் கொடுக்க வேண்டுமென்றே வழக்குகள் பலமுறை வந்து தோல்வி கண்டுள்ளன. பொன்னம்பலம் இராமநாதன் கூட ஒருமுறை சென்னையில் இந்த வழக்கில் வாதாடி வெற்றிகண்டுள்ளார். இப்பொழுதும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
துணிச்சல்காரரான திரு. சண்முகலிங்கம் சந்தடியில்லாமல், சலசலப்பில்லாமல் சிதம்பரத்தில் யாழ்ப்பாணத்தாரின் உரிமையை நிலை நாட்டியுள்ளார்.
தமிழகமெங்குமுள்ள ஈழத்தமிழரின் அறக்கட்டளைச் சொத்துக்களை மீட்டெடுக்க முயலும் முதலடியாக இவரின் முயற்சியைக் கொள்ளலாம்.
தொன்று தொட்டுப் பாக்கு நீரிணையைக் கடந்து தமிழ் நாட்டுக்கு வந்த ஈழத் தமிழ்த் தலைமுறைகளின் எழுகின்ற எச்சங்கள் என்றென்றும் தமிழ் நாட்டிற்குத் தொடர்ந்து வரவும் கோயில்களை வழிபடவும் தங்கு தடையின்றி வழி பிறக்குமாக.

2 Comments:

  • மிக அருமையான கட்டுரை. இங்கு இலங்கைத் தமிழருக்கும் இந்திய தமிழருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் கோயிலையும் சைவத்தையும் விழுங்க வந்தவர்களின் கூத்தாகத்தான் இருக்கும்.

    By Blogger Mark K Maity, at 11:56 AM  

  • My great grandma went to சிதம்பரம் and gave a pon thoddil to have female children is the upcoming generations. Our generation was full of male kids.

    By Blogger Doba's Kitchen Story, at 8:25 AM  

Post a Comment

<< Home