ஈழத் தமிழர்

Tuesday, May 02, 2006

எத்தர், பித்தர், போலிக் கொள்கையர்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கபிலவஸ்துவில் போர்:
ஆற்றின் ஒரு கரையில் தன் தந்தையின் வழிவந்தவரின் அரசு. மறுகரையில் தன் தாயின் வழிவந்தவரின் அரசு. ஒரே மரபில் வந்த உறவுக்கார அரசர்கள்.
ஆற்றுநீரைப் பங்கிடுவதில் சிக்கல். இரு கரைகளிலும் உள்ள அரசுகள் போருக்குத் தயாராகின்றன. கபிலவஸ்துவில் போர். செவியுற்ற புத்தர் சேதவனத்திலிருந்து புறப்பட்டுக் கபிலவஸ்து சென்றார். போருக்குத் தயார் நிலையின் இருந்த இரு அரசர்களையும் அழைத்தார்.
பூமியின் மேடே அணைக்கரை. அந்த அணைக்கரையை விட மனிதர்களின் இரத்தம் குறைந்த மதிப்புள்ளதா? பயனற்ற ஒன்றிற்காக விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பலியிடப் போகிறீர்களா?
புத்தர் அந்த இரு அரசர்களிடமும் வினவினார். சிந்தனைத் தெளிவுபெற்ற அரசர்கள் போரைக் கைவிட்டனர். அமைதி உடன்பாட்டுக்கு வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் போர்:
வட இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் அரசின் பெயர் நாக நாட்டு அரசு. அங்கே, ஒரே வழியில் வந்த தமிழ் மன்னர் இருவர்; மாமனும் மருகனும் ஆனவர்.
முன்னோர் விட்டுச் சென்ற மாணிக்கக் கற்களால் ஆன அரியணை உனக்கா, எனக்கா என மன்னர் இருவரும் ஒருவரோடு ஒருவர் போரிடப் படை திரட்டுகின்றனர். செவியுற்ற புத்தர் சேதவனத்திலிருந்து புறப்படுகிறார். யாழ்ப்பாணக் குடாநாட்டை அடைகிறார்.
மனித உயிர்களை விட மாணிக்கக் கற்கள் விலைமதிப்புடையனவா? உயிர்கள் பெரிதா? அரியணை பெரிதா? அரியணையை எனக்குரியது. போரைக் கைவிடுங்கள்.
புத்தரின் புனித வேண்டுகோளை ஏற்றுத் தமிழ் மன்னர் போரைக் கைவிடுகின்றனர். புத்தரின் புனித போதனைகளைக் கேட்டுப் புத்தக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர்.
கீழ்நில மருங்கின் நாகநாடாளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி, எமதீதென்றே எடுக்கல் ஆற்றோர், தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார், செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமர் புரிநாள், இருஞ்செரு ஒழிமின் எமதீது என்றே பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும் (மணிமேகலை 8: 54-61) மணிமேகலையின் பின் எழுதப்பெற்ற மகாவமிசத்திலும் (1: 44-70) இந்தச் செய்தி உண்டு.
போலிப் புத்தர்கள்:
போரகள் இரண்டினைத் தவிர்ப்பதற்காகப் புத்தர் பயணித்த வரலாறுகள் பதிவில் உள. பதிவாகாதன பல. போரை விரும்பாதவர் புத்தர். அன்பைப் போதித்தவர் புத்தர். மனித நாகரிக வளர்ச்சியின் அடிப்படையே அன்பும் புரிந்துணர்வும் எனப் போதித்த, புத்தரின் போதனைகளைக் கடைப்பிடிக்கிறோம், புத்த சாசனத்தைக் காக்கும் அரசே எமது அரசு எனக் கொழும்பு அரசு உரத்துக் கூறுகிறது.
அன்பைப் பெருக்கவும் அறத்தை வளர்க்கவும் வெறுப்பைப் போக்கவும் கருணையைக் காக்கவும் அரசியமைப்பிலேயே புத்த மதத்துக்குப் பாதுகாப்பு வழங்கிய கொழும்பு அரசு, கடந்த 50 (1956-2005) ஆண்டுகளாக அரச படைகளை ஏவித் தமிழரைக் கொன்று குவிக்கிறது, கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.
கொள்கைப் போலியரான சிங்களவருக்குப் புத்தரின் போதனைகளில் நாட்டமில்லை. போர்களைத் தவிர்த்து மனித உயிர்களைக் காத்த புத்தரின் வழி நிற்கிறோம் எனக்கூறி, புத்த சாசனத்துக்கு முன்னுரிமை எனக் கூறி, புத்தரின் போதனைகள் என்ற போர்வைக்குள் போர் முரசுகளை மறைத்து வைத்திருக்கும் மனிதப் போலிகளே சிங்களவர்.
ரஷ்யப் புரட்சி:
அடிமைக்கும் ஆண்டானுக்கும் இடையே இணக்கம் என்றும் ஏற்படாது. ஒடுக்குபவனும் ஒடுங்குபவனும் ஒரே அணியில் இருக்க முடியாது. விடுதலையும் சமத்துவமும் இருந்தால் மட்டுமே, இனங்களைத் தாண்டிய சமத்துவம் சாத்தியம்.
தேசிய மட்டத்தில் முதலாளித்துவத்துக்கு எதிராகப் பாட்டாளிகள் போரிடுவது முதல் கட்டம். இடைக்காலமான இந்த நிலைக்குப் பின்னர், அனைத்துலக மட்டத்தில் இப்போராட்டம் விரிந்து பரந்து கலந்துவிடுமென மார்க்சு நம்பினார். முன்னுதாரணங்களற்ற கொள்கைகளை மார்க்ஸ் விட்டுச் சென்றார்.
1917இல் ஆகாவென எழுந்த ரஷ்யப் புரட்சியின் அடிப்படைகளான, அமைதி, நிலம், உணவு ஆகிய முப்பெரும் முழக்கங்களுக்கு, தேசிய இன சமத்துவம், பிரிந்து செல்லும் உரிமை தளங்களாயின. புரட்சியின் வெற்றிக்குப் பின், லிதுவேனியா, எஸ்தோனியா போன்ற பகுதிகள் பிரிந்தன, தனி அரசுகளாக மலர்ந்தன. பொதுவுடைமையை முன்னெடுத்த லெனின், வரலாற்று முன்னுதாரணங்களை விட்டுச் சென்றார்.
இலங்கையின் பொதுவுடைமைக் கருத்தாளருக்கு சோவியத் யூனியன், சீனா, யூகோஸ்லாவியா, கியூபா முன்னுதாரங்களாயின. லெனினும் டிராக்சியும் மாவோவும் சேகுவாராவும் வழிபாட்டுக்குரியவராயினர்.
காய்த்துப் பழமாகவேண்டும் என்பது மார்க்சின் கருத்து; காய்க்காமலே பழுத்த பழம் கிடைக்கும் என இலங்கைப் பொதுவுடைமையாளர் கருதினர்.
போலிப் பொதுவுடைமை:
1949இன் குடியுரிமைச் சட்டம் பொதுவுடைமைவாதிகளுக்கெதிரான சிங்கள நிலவுடைமையாளரின் சதி. பத்து இலட்சம் மலையகத் தமிழர் இச்சதிக்குப் பலிக்கடா.
1952இன் அரசுசார் குடியேற்றத் திட்டங்கள் தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைத்துத் தமிழர் நிலங்களைச் சிங்களமயமாக்கின.
1956இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியெனப் பண்டாரநாயக்கா சட்டமாக்கிய விவாதத்தில், இரு மொழிகள் ஒரு நாடு, ஒரு மொழியெனில் இரு நாடுகள் எனப் பொதுவுடைமையாளரான கொல்வின் ஆர். த சில்வா கூறினார். பொதுவுடைமைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறிச் சிங்களம் ஆட்சி மொழியாகியது.
இனவெறியாளரான சிங்களவரிடையே பொதுவுடைமைக் கருத்துகள் முற்றாக எடுபடவில்லை.
பொதுவுடைமைச் சிந்தனைக்குள் மூழ்கி எழுந்த பிலிப்பு குணவர்த்தனர், நிலவுடைமைப் பண்டாரநாயக்காவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழரின் மொழியுரிமையைப் பறித்தார். தமிழரின் தாயகக் கோட்பாட்டுக்கு எதிராளியாய், 1957இன் பண்டாரநாயக்கர் - செல்வநாயகம் ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தார்.
சிங்கள நிலவுடைமைக் குடும்ப ஆதிக்க நிலைகளுள், பண்டாரநாயக்கர் குடும்பத்தவரைப் பொதுவுடைமைக் கட்சிகள் சார்ந்திருந்தன. சேனநாயக்கர் - செயவர்த்தனர் குடும்பங்களை முதலாளித்துவக் குடும்பங்களாகக் கருதி எதிர்த்தனர்.
பிலிப்பு குணவர்த்தனரைத் தொடர்ந்து, 1971இல் பீட்டர் கெனமன், என். எம். பெரைரா, கொல்வின் ஆர். த சில்வா யாவரும் சிறீமாவோ பண்டாரநாயக்கருடன் சங்கமித்தனர். சிங்களமே ஆட்சி மொழி, புத்தமே முன்னுரிமை மதம் என்ற வரிகளுடன் அமைந்த அரசியலமைப்பினை 1972இல் எழுதி வடிவமைத்தவர் இரு மொழிகள் ஒரு நாடு, ஒரு மொழியெனில் இரு நாடுகள் என 1956இல் கூறிய பொதுவுடைமைக் கட்சியாளர் கொல்வின் ஆர். த சில்வா.
ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனையோட்டத்துடன் பொதுவுடைமைக் கட்சிகளில் இருந்த சிங்களவர், ஒடுக்குமுறையின் கருவிகளாயினர்.
1971இல் ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த, சோவியத், வடகொரியப் பின்னணி கொண்ட, சேகுவாராக்கள் எனத் தம்மை அழைத்த, உரோகண விசயவீரர் தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (மவிமு), தமிழரின் மொழி, தாயக, வாழ்வுரிமைகளை முற்றாக மறுத்தது.
பீட்டர் கெனமன், என். எம் பெரைரா, கொல்வின் ஆர். த சில்வா பங்குபற்றிய சிறீமாவோவின் அரசு, உரோகண விசய வீரரின் பொதுவுடைமைப் புரட்சியாளர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையினரை 1971 சித்திரையில் படையனுப்பிச் சுட்டு, சடலங்களை ஆறுகளில் தள்ளிவிட்டது.
அக்காலத்துக்குப் பின்னர், வாசுதேவ நாணயக்காரர், பத்தேகமத் தேரர் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய பொதுவுடைமையாளர் சிலர், தமிழத் தேசியம் - தன்னுரிமை போன்றவற்றுக்குக் குரல் கொடுத்தனர்.
கொள்கைப் போலியர்:
மார்க்சின் கொள்கைகளோ, லெனினின் முன்னுதாரணங்களோ சிங்களப் பொதுவுடைமையாளருக்கு உதவவில்லை.
புத்தரின் பெயரைப் போர் தொடுக்கப் பயன்படுத்துபவரே, பொதுவுடைமைப் போர்வையில் தமிழ்த் தேசியத்தையும் தன்னுரிமையையும் ஒடுக்குகின்றனர்.
பண்டாரநாயக்கருக்குப் பிலிப்பர் போல, சிறீமாவோவுக்குக் கொல்வின் போல, சந்திரிகாவுக்கும் இராசபக்சாவுக்கும் மவிமுவின் சோமவம்சர் அமரசிங்கரும் விமல் வீரவம்சரும் இருக்கின்றனர்.
நிலவுடைமைக் குடும்பங்களின் புத்த சிங்கள இன வெறிக்குத் துணைபோபவர் போலிப் பொதுவுடைமையாளர் என்பதை இந்தியப் பொதுவுடைமையாளர் கண்டறிந்த நிகழ்ச்சி சுவையானது.
மக்கள் விடுதளை முன்னணி(மவிமு)யின் மாநாடு; உலகின் பல பாகங்களிலுமுள்ள பொதுவுடைமைக் கட்சியாளருக்கு அழைப்பு; இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக தில்லியிலிருந்து ஒருவர் போகிறார். நிகழ்த்தவுள்ள உரையைத் தயாரித்து எடுத்துச் செல்கிறார். மவிமு தலைவர்களுக்குக் காட்டுகிறார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை பற்றிய குறிப்புகள் அவ்வுரையில் இருந்தன. அவற்றை நீக்கிப் பேசுமாறு மவிமு கேட்கிறது. அவர் மறுக்கிறார். உரை நிகழ்த்தாமலே திரும்பினார் எனக் கூறுவர்.
இதற்குப்பின் இலங்கை நிலைமை குறித்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நிலை கூர்மையடைகிறது. இலங்கையுடன் பாதுகாப்பு உடன்பாடு எதையும் செய்யக் கூடாதென்ற இந்திய பொதுவுடைமைக் கட்சியின் நிலையைப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்திக் கூறுகின்றனர்.
மவிமுவைப் பொதுவுடைமை சார்ந்த அமைப்பாகக் கருதுவதை இந்திய பொதுவுடைமைக் கட்சி கைவிட்டுவிட்டது போலும்?
மகிந்தரின் சிந்தனை:
இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மகிந்தரின் சிந்தனையை வெளியிட்ட மகிந்தர் இராசபக்சா, மவிமு மற்றும் பிக்கு முன்னணியின் கைப்பாவையாகி, சந்திரிகாவின் கருத்தையும் மீறி, தமிழரின் தாயகக் கோட்பாடு, தமிழரின் தன்னுரிமை, தமிழருடன் கூட்டாட்சி என்ற நிலைக்குச் சிறிதேனும் இடங்கொடுக்காது, ஒற்றையாட்சிமுறைக்குள்ளே தீர்வு எனச் சிங்கள வாக்களரிடம் ஆணை கேட்டு நூலிழையில் வெற்றியும் பெற்றுள்ளார்.
மகிந்தரின் இப்பிறழ்ச்சிச் சிந்தனைகளைத் தெரிந்து கொண்டே, இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி, சமசமாசக் கட்சி, நவ சமசமாசக் கட்சி, புதிய மக்களாட்சிக் கட்சி, மக்களாட்சி இடதுசாரி முன்னணி (வாசுதேவர் நாணயக்காரர்) ஆகிய பொதுவுடைமை நோக்கிய கட்சிகள் மகிந்தருக்குத் தேர்தலில் முற்றுமுழுதாக ஆதரவு நல்கின.
மகிந்தரின் வெற்றிக்குப் பின்னர் அமைச்சரவையில் சேர்ந்த, சமசாசக் கட்சியும் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியும் தெரிவித்து வரும் கருத்துகள் அக்கட்சியினர் பொதுவுடைமைத் தோல் போர்த்த சிங்கள இனவெறியர் என்பதைத் தெளிவாக்கியுள்ளன.
இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரான டி. ஈ. டபிள்யூ. குணசேகரா, மகிந்தரின் அமைச்சரவையில் அரசியமைப்பு விவகார அமைச்சர். தாயகக் கோட்பாடு, தன்னுரிமை என்ற கோரிக்கைகளைத் தமிழர் கைவிட்டு, ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் இணையவேண்டுமென, கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி 11.12 இதழுக்குப் பேட்டியளித்துள்ளார். கடவுள் மறுப்புக் கொள்கையினரான குணசேகரா, புத்த பிக்குகள் மந்திரித்துக் கட்டிய பிரித் நூலை மணிக்கட்டில் கட்டியவாறு பிக்குகளுக்கு முன் மண்டியிட்டு வருகிறார்.
சமசாசக் கட்சியின் தீசர் விதாரணரும் அமைச்சராக உள்ளார். ஒற்றையாட்சிக்குள் போதுமளவு அதிகாரங்களைத் தமிழருக்குப் பகிர்ந்தளிக்க முடியுமென்று தீசர் கூறி வருகிறார்.
சிங்களப் பொதுவுடைமையாளர் எனக் கூறிக்கொள்வோர், 23 பிரிவுகளாகச் சிங்களவரிடையே உளர். இக்கட்சிகளுள் எதுவும் எச்சமின்றிச் சிங்கள மேலாதிக்கத்தை முற்று முழுதாக ஆதரிக்கின்றன. இவர்களைப் பொதுவுடைமையாளர் அகிலம் படிப்படியாகக் கைகழுவி வருகிறது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய அகிலப் பொதுவுடைமையாளருக்கு வழிகாட்டியாக மாறி உள்ளனர்.
புத்தமும் இல்லை, பொதுவுடைமையும் இல்லை; மொழியும் சமயமும் போர்வைகளாக, கொள்கைவெறுமை தலை தூக்க, தாழ்வுளப்பாங்கு மீநிற்க, வரலாற்றுப் பொய்மைகள் உயிர் கொடுக்க, வளர்ச்சியைக் காவு கொடுத்து, வாழ்வாதரங்களை விலை பேசி, கற்பனைக் குதிரைகளைப் பாயவிட்டு, சிங்களவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கும் எத்தர்களும் பித்தர்களுமே தம்மைப் புத்தர் என்றும் பொதுவுடைமையர் என்றும் புரட்டுப் பேசிவருகின்றனர்.
இவர்களின் மடமையால் ஈழத்தமிழரின் வளமான எதிர்காலம் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியதே!

தமிழீழமும் மேலை நாடுகளும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மேலைநாடுகளுக்கு இலங்கையே முதல் பரிசோதனைக் கூடமல்ல. எதியோப்பியா (எறிற்றீரியா), பாலஸ்தீனம், தென்னாபிரிக்கா, கொரியா (வட-தென்), சோவியத் யூனியன் (மத்திய ஆசிய நாடுகள்), யூகோஸ்லாவியா, கொலம்பியா, சூடான் (வட-தென்), இந்தோனீசியா (தைமூர்), சீனா (திபெத், தைவான், ஹொங்கொங், மக்காவோ), ஈராக் (குர்து), சைப்பிரஸ், ஸ்பெயின் (பாஸ்க்கு), இந்தியா (காஷ்மீர், நாகலாந்து, மிசோராம்) போன்ற பல நாடுகளில் ஏதோ ஒரு வகையில் அவர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் அவர்களின் சார்பாக இஸ்கண்டிநேவிய நாடுகளான, நோர்வே, சுவீடன், டென்மார்க்கு, பின்லாந்து ஆகிய நாடுகள், உலக நாடுகளில் அரசியல் சிக்கல்களைத் தீர்க்கும் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தன. ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகள், இஸ்கண்டிநேவிய நாடுகளுக்குப் பின்னே நின்று வலிவு கொடுத்தன.
அமைதியை நிலைநாட்டுவது ஒரு நோக்கமாக இருந்தாலும்,
-மேலைநாட்டு நுகர்ச்சிப் பொருள்களுக்குச் சந்தையை விரிவாக்கல்,
-வளரும் நாடுகளின் கனிம வளங்களைக் குறைந்த விலையில் பெறுதல்,
-ஆங்கில, பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளை உலக மொழிகளாக்கல்,
-ஆசிய ஆபிரிக்காவைக் கிறித்து மதமயமாக்கல் என்ற போப்பாண்டவரின் பிரகடனங்கள்,
-மேலைநாட்டு மக்களாட்சி முறையை ஏனைய மக்கள் ஏற்குமாறு வலியுறுத்தல்
-அமெரிக்க, பிரித்தானிய, பிரஞ்சுப் படைத்தளங்களை உலகளாவி நிலைகொள்ளச் செய்தல்,
-மேலைநாடுகளின் மறைமுக மேலாதிக்கத்தை ஏனைய நாடுகள் ஏற்குமாறு பார்த்துக் கொளல்,
-மேலை நாடுகளைவிட வேறெவரும் படைபலத்தில் வளராமல் செய்தல்,
-தாம் கண்டுபிடிக்கும் புதிய ஆயுதங்களைச் சோதிக்கும் தளமாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தல்.
ஆகியனவும் பிறவும் அவர்களின் அடிப்படை நோக்கங்களாக இருந்தன.
இந்த நோக்கங்களை நிறைவேற்ற, பெரிய நாடுகளாயுள்ள அரசுகள் தடையாக இருந்தன. எனவே, பெரிய நாடுகளை உடைத்தோ, பிரித்தோ, சிறிய நாடுகளாக மாற்றுவதே அவர்களது அமைதி நோக்க அணுகு முறைகளுள் ஒன்று.
சோவியத் யூனியன் உடைந்தது. யூகோஸ்லாவியா உடைந்தது. எரிற்றீறியா பிரிந்தது. தைமூர் பிரிந்தது. இஸ்ரேலை ஏற்கும் பாலஸ்தீனம் உருவாகி வருகிறது. சூடானின் கிறித்தவத் தென் பகுதி, தன்னாட்சியை நோக்கிப் போகிறது, ஈராக்கில், சியாக்கள், சன்னிகள், குர்துகள் தனித்தனி அரசுகளை அமைத்து இணைப்பாட்சியை அமைத்துள.
மேலோட்டமாகப் பார்த்தால் தேசிய இனக்குழுக்களுக்கு மேலை நாடுகள் உதவுவது போல் தோன்றும். உண்மை அதுவல்ல.
அமெரிக்காவில் கறுப்பர், மாயா நாகரீகத்தார் (செவ்விந்தியர்), எஸ்கிமோவினர், ஐரோப்பாவில் வட அயர்லாந்தினர், பிளெமிங்கோ மொழியினர், பாஸ்க்குகள், யப்பானின் அயினோ இனத்தவர், ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர், இறியூனியனின் தமிழர் போன்ற தேசியக் குழுக்கள் பலவற்றையும் உட்பிரிவுகளையும் இவர்கள் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதை எவரும் எடுத்துக் கூறுவதில்லை.
கிறித்தவர்களைக் காக்கத் தைமூரைப் பிரித்தவர்கள், இந்துக்களைக் காக்க, பாலியைப் பிரிக்கவில்லை.
மக்களாட்சியைப் பரப்ப விழைபவர்கள், தங்களுக்குச் சாதகமான வலதுசாரிச் சர்வாதிகாரிகளை ஆதரிக்கின்றனர்.
வளரும் நாட்டுக் கனிம வளங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குபவர்கள், தங்களது அறிவியல் தொழில்நுட்பங்களுக்குப் புலமைச் சொத்துக் காப்பு மூலம் வறிய நாடுகளிடம் பெருந் தொகைகளைக் கேட்பதுடன், வறியநாடுகளின் நெடுநாளைய கண்டுபிடிப்புகளைத் தமதாக்கிப் புலமைச் சொத்துரிமை கொண்டாட முயல்கின்றனர்.
இலங்கையில், வெளியார் தலையீட்டைத் தமிழர் நாடாமல் 35 ஆண்டுகளாகத் (1948-1983) தொடர்ந்து போராடி வந்தனர். 1983இல் சிங்கள இனவெறியின் கோரத் தாண்டவத்தைத் தாளாத தமிழர், ஏதிலிகளாயினர், பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர்.
ஏறத்தாழப் பத்து இலட்சம் தமிழர் வடஅமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பசிபிக் நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
மேலைநாடுகளின் கவனத்தை இப் புலம்பெயர்ப் படையெடுப்பு ஈர்த்தது. அங்கு போன தமிழரும் வாழாவிருக்கவில்லை. அதன் பெறுபேறாக 1995ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய நாடுகள் இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க நேரடியாக வியூகங்கள் வகுக்கத் தொடங்கின.
முதலில் வந்த பிரித்தானியாவின் முன் மொழிவுகள், சிங்களவரை நோக்கியே அமைந்தன. ஒரு கட்சியினர் முன்மொழிவதை எதிர்க் கட்சியினர் மறுப்பதைக் காரணம் காட்டி, இனச்சிக்கலைத் தீர்க்க, முதலில் சிங்களவரிடையே கருத்தொருமை உருவாக வேண்டும் எனப் பிரித்தானியா சுட்டியது. பொக்ஸ் திட்டம் என அழைக்கப் பெற்ற இத்திட்டம், சிங்களவரின் வெறுப்புக்குள்ளானதால், பிரித்தானியாவைத் தீர்வுக் களத்திலிருந்து கொழும்பு வெளியேற்றியது.
மேலைநாடுகள் சார்பில், 1999இல் நோர்வே அணுகியது. 2000இல் நோர்வேயைச் சந்திரிகாவே அழைத்தார்.
2002 பெப்ருவரி 24இல் கொழும்பும் கிளிநொச்சியும் எழுதி ஏற்ற உடன்பாடு, கொழும்பு அரசின் ஆற்றாமையின் வெளிப்பாடு. இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பகுதிகளைத் தன்வசம் வைத்திருக்க முடியாதென்பதைக் கொழும்பு ஒப்புக்கொண்ட வரலாற்று ஆவணமே அந்த உடன்பாடு.
கொழும்பு இவ்வாறு ஒப்புக் கொண்டதற்கு மேலைநாடுகள் சாட்சியம் கூறின. இந்த ஆவணத்தை உருவாக்குவதிலும் ஒப்பம் பெறுவதிலும் மருத்துவச்சியாக மேலைநாடுகளின் சார்பாக நோர்வே பணிபுரிந்தது.
சிங்கள மேலாதிக்கத்தைப் போக்கி, தமிழரின் ஆதிக்கத்தைத் தமிழர் தாயகத்தில் நிறுவிய திறமையும் பெருமையும் சிறப்பும், பிரபாகரனையும் அவர் தலைமை தாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையுமே சேரும்.
1972இல் தமிழரின் ஒப்புதலின்றி, அரசியலமைப்பைச் சிங்களவர் உருவாக்கினர். அப்பொழுதே தமிழரின் இறைமை தமிழரிடம் வந்து சேர்ந்தது. (படிக்க: மு. திருச்செல்வம் - ஈழத்தமிழர் இறைமை, மணிமேகலைப் பிரசுர வெளியீடு) தமிழரின் இறைமையைத் தன்னாதிக்கமுடைய அரசு மூலம் நடைமுறைப்படுத்தும் நெடும் பயணத்தின் முதற் படியே, 2002 பெப்ருவரியில் எழுதிய சிங்கள-தமிழ் உடன்பாடு.
மேலை நாடுகளின் அடிப்படை நோக்கங்களுள் சிக்காமல், தமிழ்த் தேசியத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வள்ளுவ வழியாளர் (பார்க்க: திருக்குறள், பொருட்பால் - அரசியல்) பிரபாகரனே. இறைமையும் தன்னாதிக்கமும் உடைய மக்களாக, தம் தாயகத்தின் பெரும் பகுதிக்குள் ஈழத்தமிழர் 2002க்குப் பின் வாழ்கின்றனர்.
மேலைநாடுகளின் முயற்சியால் வந்த தீர்வு சிங்களவருக்கு அச்சத்தைத் தர, நோர்வேயையும் மேலைநாடுகளையும் வெளியேற்றச் சிங்களவர் 2005 தேர்தலில் வாக்களித்தனர். இந்தியாவை மீண்டும் உள்ளிழுக்க முயல்கின்றனர்.
சிங்களவர் சார்பாக உலகில் எந்த நாட்டின் எத்தகைய தலையீடு அமைந்தாலும் நீதியும் நியாயமும் தமிழர் பக்கமே அமையும். தமிழ்ப் போராளிகளின் உயிரீகைகள் தமிழ்த் தேசியத்தை வெற்றியுடன் முன்னெடுத்துச் செல்லும். தமிழர் மரபு வழித் தாயகத்தில் (படிக்க: தமிழீழம் நாட்டு எல்லைகள், காந்தளகம் வெளியீடு) தமிழீழம் அமைவதே தீர்வு. இஃதை இன்றே, இப்பொழுதே உலகம் உணர்வதே விரைந்த மனித வளர்ச்சிக்கு வழி.

நாகநாடு, இலங்கைத் தமிழகமே

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

நாகநாடு, இலங்கைத் தமிழகமே. இதை உறுதி செய்யும் வகையில், ஒரே செய்தியை முதலில் மணிமேகலையும் பின்னர் மகாவமிசமும் கூறியதைப் பார்க்க வேண்டுகிறேன்.
மணிமேகலைச் செய்தி: -திபி 200
கீழ்நில மருங்கின் நாகநாடாளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி, எமதீதென்றே எடுக்கல் ஆற்றோர், தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார், செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமர் புரிநாள், இருஞ்செரு ஒழிமின் எமதீது என்றே பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும்
(மணிமேகலை 8: 54-61)
மகாவமிசச் செய்தி: -திபி 660
44. இரக்கமுள்ள ஆசான், நமது அருளாளர், நம்மை ஆட் கொண்டவர், உலகம் முழுவதும் துன்பத்திலிருந்து விடு படுவதில் மகிழ்வடைபவர் ஞானமடைந்த ஐந்தாவது ஆண்டில் சேத வனத்தில் தங்கியிருந்தார்.
45. மாணிக்கக்கல் பதித்த அரியணைக்காகப் போர் ஒன்று நிகழப் போவதை முன்கூட்டியே புத்தர் அறிந்தார். நாகர்களான மகோதரனும் குலோதரனும் மாமனும் மருமகனும் ஆவர்.
46. அவர்கள் இருவருக்கும் தனித்தனிப் படைகள் இருந்தன. மகோதரனின் படைகளும் குலோதரனின் படைகளும் மாணிக்கக்கல் பதித்த அரியணைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடப் போவதை புத்தர் அறிந்தார்.
47. போரிட இருந்த நாகர்களின் மீது இரக்கம் கொண்டார். சித்திரைத் திங்கள் அமாவாசை நாள் உபோசத நாள். அன்று அதிகாலை புனிதமான தனது திருவோட்டுடனும் காவி உடைகளுடனும் புத்தர் நாக நாட்டை வந்தடைந்தார்.
48. ஐநூறு யோசனை பரப்பளவு கொண்ட நாகநாடு கடலால் சூழப்பட்டிருந்தது. அதன் அரசன் நாக இனத்தவனான மகோதரன். செயற்கரியன செய்யும் ஆற்றல் அம்மன் னனிடம் இருந்தது.
49. மகோதர மன்னன் தன் தங்கையை, வர்த்தமான மலையின் நாக அரசனுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தான். இத் தங்கையின் மகனே குலோதரன்.
50. மகோதரனின் தந்தை தன் மகளுக்கு மாணிக்கக்கல் பதித்த அழகிய அரியணையை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
51. மகோதரனின் தந்தை இறந்த பின்பு இந்த அரியணைக் காக மாமனுக்கும் மருகனுக்கும் இடையே போர் மூளும் ஆபத்து எழுந்தது. மலைவாழ் நாகர்கள் மிகவும் வலிமையுடையவராக இருந்தனர்.
52. இப்போரைத் தடுக்க, நாகதீபத்திற்குச் சேதவனத்திலிருந்து புத்தர் புறப்பட்டார். வாயிலில் இராஜாயாதன மரம் இருந்தது. அம்மரத்தடியில் சமித்தசுமணன் வாழ்ந்தான்.
53. அந்த மரத்தைப் புத்தர் மீது குடையாகப் பிடிக்க விழைந்தான். புத்தரின் அனுமதி பெற்று இராஜாயாதன மரத்தை அவருக்கு நிழற்குடையாகப் பிடித்தவாறு நாக தீபம் வந்தான். ஓர் இடத்தில் அம்மரத்தை வைத்தான்.
54. இராஜாயாதன மரத்தை நாகதீபத்தில் வைத்த இடத்திலே தனது முற்பிறவியில் நாகதீபத்தில் சமித்தசுமணன் வாழ்ந்தவன். அவனது முற்பிறவியில் அங்கே பசித்த துறவிகள் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
55. இதைக் கண்டதும் அவன் மகிழ்ந்தான். துறவிகளின் திருவோடுகளைத் துடைக்க இலைகளைக் கொடுத்தான்.
56. இப் புண்ணிய செயலால் அவன் சேத வனத்தில் இராஜாயாதன மரத்தடியில் மீண்டும் பிறந்தான். அந்த மரம் சேத வனக் கோட்டத்தின் வெளிவாயிலில் வளர்ந்திருந்தது.
57. சமித்தசுமணனுக்கும் நாகதீபத்துக்கும் வரப்போகும் நன்மையை தேவதேவர் உணர்ந்தார். சமித்த சுமணனையும் மரத்தையும் நாகதீபத்துக்குக் கொண்டுவந்தார்.
58. நாகர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர். போர்க்களத்தின் மேலே, நடுவானில், மன இருளைப் போக்கி, ஒளியைத் தரும் புத்தர் தோன்றினார். அச்சமயம் போர்க்களத்தில் அச்சம் தரும் காரிருள் கவிந்தது.
59. நாகர்கள் பீதியடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் புத்தர் மீண்டும் அங்கு ஒளியேற்றினார். ஒளி வெள்ளத்தில் அருளாளரான புத்தரை நாகர்கள் கண்டனர். மகிழ்வுடன் அவர் திருவடிகளில் வீழ்ந்து வண ங்கினர்.
60. நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் வழிகாட்டும் அறக்கோட்பாடுகளைப் புத்தர் போதித்தார். நாகர்கள் இருவரும் அரியணை மீதிருந்த ஆசையைத் துறந்தனர். அரியணையைப் புத்தருக்கு மகிழ்வுடன் வழங்கினர்.
61. நடுவானத்திலிருந்து நிலத்திற்குப் புத்தர் இறங்கி வந்தார். அந்த அரியணையில் அமர்ந்தார். அமுதமான உணவையும் பானத்தையும் நாக மன்னர்கள் வழங்கினர். அவற்றை அருந்தினார்.
62. கடல் சூழ்ந்த அந்தக் குடாநாட்டிலும் அதைச்சார்ந்த பெருநிலப் பரப்பிலும் எண்பது கோடி நாகர்கள் வாழ்ந்தனர். மூன்று கோட்பாடுகளையும் வாழ்வொழுக்கங்களையும் அவர்களுக்குப் புத்தர் போதித்தார்.
63. நாக மன்னன் மகோதரனின் தாய்மாமனான மணியக்கிகன், கல்யாணியின் (தென்னிலங்கையின் இன்றைய களனி நதிப் பகுதி) நாக அரசன் ஆவான். போரில் பங்குபெற மணியக்கிகன் வந்திருந்தான்.
64. இலங்கைக்கு முதல் முறை புத்தர் வந்தபொழுது போதித்த மெய்நெறிகளை மணியக்கிகன் செவியுற்றிருந்தான். புத்தரின் அறக்கோட்பாடுகள் அவனைக் கவர்ந்திருந்தன. இப்பொழுது புத்தரை நேரில் கண்டு வழிபட்டான்.
65. தாங்கள் எங்கள் மீது பேரிரக்கம் காட்டினீர்கள். ஆசிரியரே, நீங்கள் எங்கள் முன் தோன்றி இராவிட்டால் நாங்கள் அழிந்திருப்போம்.
66. என் மீதும் இரக்கம் காட்டுங்கள். தாங்கள் அன்பில் செழிப்பவர். கனிவில் திளைப்பவர். நான் வாழும் கல்யாணிக்கு, இணையற்றவரே, தாங்கள் வர வேண்டும் என்றான் மணியக்கிகன்.
67. மௌனத்தின் மூலம் மணியக்ககனின் அழைப்பைப் புத்தர் ஏற்றார். தான் அமர்ந்த இடத்தில் இராஜாயாதன மரத்தை நடுவித்தார்.
68. இராஜாயாதன மரத்தையும் மாணிக்கக் கல் பதித்த அரியணையையும் நாக மன்னர்களிடம் கையளித்த புத்தர், அவற்றை வணங்குமாறு கூறினார்.
69. நான் இவற்றைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவு கூருங்கள். நாக மன்னர்களே, இவற்றை வழிபடுங்கள். அன்பர்களே இவற்றை வழிபட்டால் உங்களுக்கு மகிழ்ச்சியும் அருளும் கிட்டும் என்றார் புத்தர்.
70. இவற்றையும் பிற அறவுரைகளையும் கூறிய பின்பு உலகத்தை ஆட்கொள்ளுபவரான அருளாளர் சேத வனத்திற்குப் புறப்பட்டார்.
மகாவமிசம் (1: 44-70)