ஈழத் தமிழர்

Tuesday, May 02, 2006

நாகநாடு, இலங்கைத் தமிழகமே

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

நாகநாடு, இலங்கைத் தமிழகமே. இதை உறுதி செய்யும் வகையில், ஒரே செய்தியை முதலில் மணிமேகலையும் பின்னர் மகாவமிசமும் கூறியதைப் பார்க்க வேண்டுகிறேன்.
மணிமேகலைச் செய்தி: -திபி 200
கீழ்நில மருங்கின் நாகநாடாளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி, எமதீதென்றே எடுக்கல் ஆற்றோர், தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார், செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமர் புரிநாள், இருஞ்செரு ஒழிமின் எமதீது என்றே பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும்
(மணிமேகலை 8: 54-61)
மகாவமிசச் செய்தி: -திபி 660
44. இரக்கமுள்ள ஆசான், நமது அருளாளர், நம்மை ஆட் கொண்டவர், உலகம் முழுவதும் துன்பத்திலிருந்து விடு படுவதில் மகிழ்வடைபவர் ஞானமடைந்த ஐந்தாவது ஆண்டில் சேத வனத்தில் தங்கியிருந்தார்.
45. மாணிக்கக்கல் பதித்த அரியணைக்காகப் போர் ஒன்று நிகழப் போவதை முன்கூட்டியே புத்தர் அறிந்தார். நாகர்களான மகோதரனும் குலோதரனும் மாமனும் மருமகனும் ஆவர்.
46. அவர்கள் இருவருக்கும் தனித்தனிப் படைகள் இருந்தன. மகோதரனின் படைகளும் குலோதரனின் படைகளும் மாணிக்கக்கல் பதித்த அரியணைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடப் போவதை புத்தர் அறிந்தார்.
47. போரிட இருந்த நாகர்களின் மீது இரக்கம் கொண்டார். சித்திரைத் திங்கள் அமாவாசை நாள் உபோசத நாள். அன்று அதிகாலை புனிதமான தனது திருவோட்டுடனும் காவி உடைகளுடனும் புத்தர் நாக நாட்டை வந்தடைந்தார்.
48. ஐநூறு யோசனை பரப்பளவு கொண்ட நாகநாடு கடலால் சூழப்பட்டிருந்தது. அதன் அரசன் நாக இனத்தவனான மகோதரன். செயற்கரியன செய்யும் ஆற்றல் அம்மன் னனிடம் இருந்தது.
49. மகோதர மன்னன் தன் தங்கையை, வர்த்தமான மலையின் நாக அரசனுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தான். இத் தங்கையின் மகனே குலோதரன்.
50. மகோதரனின் தந்தை தன் மகளுக்கு மாணிக்கக்கல் பதித்த அழகிய அரியணையை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
51. மகோதரனின் தந்தை இறந்த பின்பு இந்த அரியணைக் காக மாமனுக்கும் மருகனுக்கும் இடையே போர் மூளும் ஆபத்து எழுந்தது. மலைவாழ் நாகர்கள் மிகவும் வலிமையுடையவராக இருந்தனர்.
52. இப்போரைத் தடுக்க, நாகதீபத்திற்குச் சேதவனத்திலிருந்து புத்தர் புறப்பட்டார். வாயிலில் இராஜாயாதன மரம் இருந்தது. அம்மரத்தடியில் சமித்தசுமணன் வாழ்ந்தான்.
53. அந்த மரத்தைப் புத்தர் மீது குடையாகப் பிடிக்க விழைந்தான். புத்தரின் அனுமதி பெற்று இராஜாயாதன மரத்தை அவருக்கு நிழற்குடையாகப் பிடித்தவாறு நாக தீபம் வந்தான். ஓர் இடத்தில் அம்மரத்தை வைத்தான்.
54. இராஜாயாதன மரத்தை நாகதீபத்தில் வைத்த இடத்திலே தனது முற்பிறவியில் நாகதீபத்தில் சமித்தசுமணன் வாழ்ந்தவன். அவனது முற்பிறவியில் அங்கே பசித்த துறவிகள் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
55. இதைக் கண்டதும் அவன் மகிழ்ந்தான். துறவிகளின் திருவோடுகளைத் துடைக்க இலைகளைக் கொடுத்தான்.
56. இப் புண்ணிய செயலால் அவன் சேத வனத்தில் இராஜாயாதன மரத்தடியில் மீண்டும் பிறந்தான். அந்த மரம் சேத வனக் கோட்டத்தின் வெளிவாயிலில் வளர்ந்திருந்தது.
57. சமித்தசுமணனுக்கும் நாகதீபத்துக்கும் வரப்போகும் நன்மையை தேவதேவர் உணர்ந்தார். சமித்த சுமணனையும் மரத்தையும் நாகதீபத்துக்குக் கொண்டுவந்தார்.
58. நாகர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர். போர்க்களத்தின் மேலே, நடுவானில், மன இருளைப் போக்கி, ஒளியைத் தரும் புத்தர் தோன்றினார். அச்சமயம் போர்க்களத்தில் அச்சம் தரும் காரிருள் கவிந்தது.
59. நாகர்கள் பீதியடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் புத்தர் மீண்டும் அங்கு ஒளியேற்றினார். ஒளி வெள்ளத்தில் அருளாளரான புத்தரை நாகர்கள் கண்டனர். மகிழ்வுடன் அவர் திருவடிகளில் வீழ்ந்து வண ங்கினர்.
60. நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் வழிகாட்டும் அறக்கோட்பாடுகளைப் புத்தர் போதித்தார். நாகர்கள் இருவரும் அரியணை மீதிருந்த ஆசையைத் துறந்தனர். அரியணையைப் புத்தருக்கு மகிழ்வுடன் வழங்கினர்.
61. நடுவானத்திலிருந்து நிலத்திற்குப் புத்தர் இறங்கி வந்தார். அந்த அரியணையில் அமர்ந்தார். அமுதமான உணவையும் பானத்தையும் நாக மன்னர்கள் வழங்கினர். அவற்றை அருந்தினார்.
62. கடல் சூழ்ந்த அந்தக் குடாநாட்டிலும் அதைச்சார்ந்த பெருநிலப் பரப்பிலும் எண்பது கோடி நாகர்கள் வாழ்ந்தனர். மூன்று கோட்பாடுகளையும் வாழ்வொழுக்கங்களையும் அவர்களுக்குப் புத்தர் போதித்தார்.
63. நாக மன்னன் மகோதரனின் தாய்மாமனான மணியக்கிகன், கல்யாணியின் (தென்னிலங்கையின் இன்றைய களனி நதிப் பகுதி) நாக அரசன் ஆவான். போரில் பங்குபெற மணியக்கிகன் வந்திருந்தான்.
64. இலங்கைக்கு முதல் முறை புத்தர் வந்தபொழுது போதித்த மெய்நெறிகளை மணியக்கிகன் செவியுற்றிருந்தான். புத்தரின் அறக்கோட்பாடுகள் அவனைக் கவர்ந்திருந்தன. இப்பொழுது புத்தரை நேரில் கண்டு வழிபட்டான்.
65. தாங்கள் எங்கள் மீது பேரிரக்கம் காட்டினீர்கள். ஆசிரியரே, நீங்கள் எங்கள் முன் தோன்றி இராவிட்டால் நாங்கள் அழிந்திருப்போம்.
66. என் மீதும் இரக்கம் காட்டுங்கள். தாங்கள் அன்பில் செழிப்பவர். கனிவில் திளைப்பவர். நான் வாழும் கல்யாணிக்கு, இணையற்றவரே, தாங்கள் வர வேண்டும் என்றான் மணியக்கிகன்.
67. மௌனத்தின் மூலம் மணியக்ககனின் அழைப்பைப் புத்தர் ஏற்றார். தான் அமர்ந்த இடத்தில் இராஜாயாதன மரத்தை நடுவித்தார்.
68. இராஜாயாதன மரத்தையும் மாணிக்கக் கல் பதித்த அரியணையையும் நாக மன்னர்களிடம் கையளித்த புத்தர், அவற்றை வணங்குமாறு கூறினார்.
69. நான் இவற்றைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவு கூருங்கள். நாக மன்னர்களே, இவற்றை வழிபடுங்கள். அன்பர்களே இவற்றை வழிபட்டால் உங்களுக்கு மகிழ்ச்சியும் அருளும் கிட்டும் என்றார் புத்தர்.
70. இவற்றையும் பிற அறவுரைகளையும் கூறிய பின்பு உலகத்தை ஆட்கொள்ளுபவரான அருளாளர் சேத வனத்திற்குப் புறப்பட்டார்.
மகாவமிசம் (1: 44-70)

0 Comments:

Post a Comment

<< Home