ஈழத் தமிழர்

Tuesday, October 25, 2005

ஈழத் தமிழர் என்ற அடையாள உணர்வே சிறந்த பாதுகாப்பு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இடம்- ஏறாவூர்; நிகழ்ச்சி- ஐக்கிய மீலாத் விழா; முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்- தலைவர். கொள்கை பரப்புச் செயலாளர் சேகுதாவூது பசீர்- பேச்சாளர்.
"முஸ்லீம்களின் பாதுகாப்புக் குறித்த சந்தேகம் தொடர்ந்து நீடிக்குமானால் இன்று ஆளணி இன்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தின் ஆளணித் தளத்தை அதிகரிக்கச் செய்யும் கைங்கரியத்தை முஸ்லிம்கள் செய்ய வேண்டி ஏற்படும்" என அவ்விழாவில் பசீர் பேசியுள்ளாராம்.
ரவூப் ஹக்கீம், சேகுதாவூத் பசீர் இருவரும் கொழும்பு அரசில் அமைச்சர்கள். கொழும்பு அரசுக்கு உண்மையாக நடக்க உறுதி பூண்டவர்கள்.
கொழும்பு அரசுக்கு எதிராகப் போரிட என்றே அமைந்த தமிழர் படையில் ஆளணி சேர்க்கும் கைங்கரியத்தில் நிச்சயமாக பசீரோ ஹக்கீமோ ஈடுபடமாட்டார்கள். கொழும்பு அரசுப் படைக்கு ஆளணி சேர்ப்பதே அவர்களின் முதற்கடமை. அது மட்டுமல்ல பாகிஸ்தானின் படையையும் இலங்கைக்கு உதவ அழைப்பது அதைவிட அவர்கட்குரிய பாரிய கடமை.
அப்படியிருக்க, மிரட்டும் தொனியில் பேசியதன் நோக்கம் என்ன? ஆறுமுகம் தொண்டைமானும், சந்திரசேகரனும் பிறரும் கொழும்பு அரசில் உள்ளனர். அவர்கள் இப்படி மிரட்டுவதில்லையே!
தமிழர் வேறு, முஸ்லிம்கள் வேறு என்ற கண்ணோட்டமே இப்பேச்சின் அடிப்படை. கொழும்பு அரசுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள தமிழர் படை முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புத் தரவில்லை என்பதும் இப்பேச்சின் அடிப்படை.
1981 கணக்கெடுப்பில் தீவில் 69.3% புத்தர், 15.5% விதம் இந்துக்கள், 7.6% கிறித்தவர், 7.5% முஸ்லிம்கள் எனவும், 74% சிங்களவர், 25.2% தமிழர் எனவும் 0.8% பிறமொழிகள் எனவும் மக்கள் தொகைப் பகுப்பு அமைந்தது.
22 மாவட்டங்களில் அம்பாறை 41.7%, திருகோணமலை 29.8%, மன்னார் 27.4%, மட்டக்களப்பு 23.4%, கண்டி 11.1%, புத்தளம் 10.2% ஆகிய ஆறு மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் கணிசமான தொகையில் வாழ்கின்றனர். எஞ்சிய 16 மாவட்டங்களிலும் மிகச் சிறிய தொகையில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
மன்னார் 42.1%, புத்தளம் 37.9%, கம்பஹா 23.4%, முல்லைத்தீவு 15.8%, யாழ்ப்பாணம் / கிளிநொச்சி 12.6% ஆகிய ஆறு மாவட்டங்களிலும் கிறித்தவர் கணிசமாக வாழ்கின்றனர். எஞ்சிய 16 மாவட்டங்களிலும் மிகச் சிறிய தொகையில் கிறித்தவர் வாழ்கின்றனர்.
யாழ்ப்பாணர் / கிளிநொச்சி 85%, முல்லைத்தீவு 77.9%, வவுனியா 68.7%, நுவரெலி 50.3%, திருகோணமலை 31.6%, மன்னார் 27.2%, வதுளை 24.3%, அம்பாறை 18.7%, கண்டி 12.7%, இரத்தினபுரி 11.6%, மாத்தளை 11.6% ஆகிய 14 மாவட்டங்களில் சைவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். எஞ்சிய 8 மாவட்டங்களில் மிகச் சிறிய தொகையிலேயே உளர்.
யாழ்ப்பாணம் / கிளிநொச்சி 0.6%, முல்லைத்தீவு 1.4%, மன்னார் 3.2% ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகச் சிறிய தொகையிலாக உள்ள புத்தர்கள் எஞ்சிய 18 மாவட்டங்களிலும் கணிசமான தொகையில் வாழ்கின்றனர்.
இலங்கைத் தீவில் மதவழித் தாயகங்கள் கிடையாது. மொழிவழித் தாயகங்கள் உண்டு. முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ். எனவே அவர்கள் தமிழர் தாயகத்துக்கு உரியவர்கள். அவர்கள் கணிசமான தொகையில் வாழும் கண்டி தவிர்த்து ஐந்து மாவட்டங்களும் தமிழர் தாயகப் பகுதிகளாகும்.
சிங்களப் படையை எதிர்த்துப் போரிடும் தமிழர் படையில் முஸ்லிம்கள் உளர், கிறித்தவர்கள் உளர், சைவர்கள் உளர்.
போர்ச்சூழ்நிலையில் அனைத்து மதத் தமிழருமே பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். அழிவுக்கும் இடப்பெயர்வுக்கும் ஆளாகி அல்லற் படுகின்றனர். முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற மதம் சார்ந்த தமிழர் பாதுகாப்புடன் இருப்பதாக பசீரும் ஹக்கீமும் கருதுகிறார்களா?
தில்லிச் சுல்தான் அலாவுதீன் கில்ஜீயின் படைத் தளபதியான மாலிக்கபூரின் படைகள் மதுரையை நோக்கி வந்தன. மதுரை மன்னன் வீரபாண்டியன் மாலிக்கபூரை எதிர்த்துப் போரிட்டான். மாலிக்கபூர் அப்பொழுது மதுரையில் உள்ள முஸ்லிம்களைத் தனக்கு உதவக் கேட்டான். "நாங்கள் முஸ்லிம்களாயினும் பாண்டிநாட்டுத் தமிழர். நன்றி உணர்வும் தேசாபிமானமும் உடையவர்கள் நாங்கள். பாண்டிநாட்டின் வெற்றியே எங்கள் வெற்றி. எங்கள் நாட்டுக்குத் துரோகம் செய்ய இஸ்லாம் கற்றுக்கொடுக்கவில்லை" எனக் கூறிப் பாண்டியப் படைகளுடன் சேர்ந்து மாலிக்கபூருக்கு எதிராக முஸ்லிம்கள் போரிட்டனர்.
இந்த வரலாற்றை முஸ்லிம் தமிழர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். அடைக்கலம் கொடுப்பதில் ஆதரிப்பதில் இலங்கைத்தீவில் தமிழர் தாயகம் காட்டிய இணக்கமே தமிழர் தாயகத்தின் 5 மாவட்டங்களில் இன்று முஸ்லிம் மதத்தினர் கணிசமான தொகையில் வாழக்காரணமாகும்.
"முகமதியார் இந்த மண்ணுக்குரியவரல்லர். யூதர்கள் போல் பணத்தைக் கறந்தெடுக்கின்றனர். தென்இந்திய முகமதிய அந்நியர் இலங்கைக்கு வருகின்றனர். அப்பாவிச் சிங்களவரைக் கிராமங்களில் பார்க்கின்றனர். அச்சிங்களவருக்கு வணிக அறிவு இல்லாததைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் செழிக்கின்றனர். அந்தோ சிங்களவர் மாய்கின்றனர்". (1915, அநாகரீக தர்மபாலர்)
"ஆங்கிலேயருக்கு ஜெர்மானியர் எதிரிபோலச் சிங்களவருக்கு முகமதியர் எதிரியாவார். மதத்தால், இனத்தால், மொழியால் முகமதியர் வெளியூரவர். ஆங்கிலேயர், சிங்களவரைச் சுடலாம், தூக்கில் போடலாம், சிறைக்குள் தள்ளலாம். ஆனாலும் சிங்களவரும் முகமதியர்களும் காலாதிகாலம் எதிரிகளாகவே இருப்பர். சிங்களவரைப் பழித்துரைத்துத் தூற்றும் முகமதியரை இன்னமும் பொறுத்துக்கொள்ள முடியாது." (1915, அநாகரீக தர்மபாலர்)
மேற்கூறிய வரிகளின் பிரதிபலிப்பான சிங்களவரின் கண்ணோட்டமே, சிங்களத் தாயகத்தில் கண்டி தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரிய அளவில் குடியேறாமை ஆகும்.
காலாதி காலத்துக்கும் எதிரிகள் என்றும் மதத்தால் இனத்தால் மொழியால் அந்நியர் என்றும் சிங்கள - புத்த இனவாதத்தின் பிதாமகர் கூறியிருப்பதை ஹக்கீமும் பசீரும் மறந்து விட்டார்கள். வீரபாண்டியனுக்குத் தோள் கொடுத்த தமிழரான முஸ்லிம்களின் உணர்வையும் ஹக்கீமும் பசீரும் மறந்துவிட்டார்கள். எங்கள் நாட்டுக்குத் துரோகம் செய்ய இஸ்லாம் கற்றுக்கொடுக்கவில்லை என மதுரை இஸ்லாமியர் கூறியதையும் ஹக்கீமும் பசீரும் மறந்துவிட்டார்கள்.
முஸ்லிம்களும் , கிறித்தவர்களும், சைவர்களும் ஒருவர்க்கொருவர் பேதித்தால், முரண்பட்டால், சிண்டு பிடித்தால் நன்மை பெறுவது சிங்களப் பேரின வாதமே! இதையும் ஹக்கீமும் பசீரும் மறந்து விட்டார்கள்.
எஸ். ஜே. வி. செல்வநாயகம் தொடக்கம் அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம்களைத் தமிழரின் அங்கமாகவே பார்த்தனர், நடந்து கொண்டனர். இப்பொழுதும் அதே நிலைதான் தொடர்கிறது. அங்கங்கே அவ்வப்பொழுது அனைத்து (1.சைவ, 2.கிறித்தவ, 3.முஸ்லிம், 4.தமிழர் படை) த் தரப்பிலும் தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கைமண்ணளவான தவறுகள் பல. இமாலயத் தவறுகள் சில. இத்தவறுகள் யாவும் சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்துப் போரிடுகையில் நேர்ந்தனவே அன்றித் திட்டமிட்டன அல்ல.
சிங்களப் படையில் தமிழரின் ஒரு பகுதியையாவது சேர்த்துத் தமிழரே தமிழரைக் கொன்றழிக்குமாறு ஏவக் காத்துக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு உதவும் தமிழர், நுனிக் கொம்பில் இருந்து அடிமரத்தை வெட்டுவாருக்கு ஒப்பானவர். பசீரோ, ஹக்கிமோ இதை அறியாதவரல்லர்.
வென்றடு புலியேறன்ன அமர் விளையாட்டின் மிக்கவர். ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவராவர். வருவிசைப் புனலைக் கற்சிறைப்போல் ஒருவன் தாங்கிய பெருமையர். ஒரு குடை மன்னனைப் பலகுடை நெருங்கச் செருவிடைத் தமியன் தாங்கற்கு முரித்தவர். அவர் எத்திசைச் செல்லினும் அத்திசை வெற்றியே. இதலன்றோ சிங்களப் படையுடன் சேர்பவர் எவருக்கும் தோல்வி தவிர வேறொன்றும் இல்லை என்பதே வரலாறு. பசீரோ, ஹக்கிமோ இதை அறியாதவரல்லர்.
மனிதர் மதத்தை மாற்றிக் கொள்ளலாம். சைவர்கள் கிறித்தவராகின்றனர், சைவர்கள் முஸ்லிமாகின்றனர். கிறித்தவர் முஸ்லிமாகின்றனர். கிறித்தவர் சைவர்களாகின்றனர். முஸ்ஸிம் கிறித்தவராகின்றனர். முஸ்லிம் சைவராகின்றனர்.
?ாயையோ, தாய் மொழியையோ மனிதரால் மாற்றவே முடியாது. அப்படி மறப்பவரோ மறுப்பவரோ மாற்ற முனைபவரோ நெல்லிடைப் பதரானவர்; மனிதரே அல்லர்.
?ைவர்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்கள்பால் காட்டிய அன்பையும் ஆதரவையும் முஸ்லிம்கள் எளிதில் மறந்துவிட முடியாது. வரலாற்றைப் புரட்டிப்பார்த்து நன்றி உணர்வுடன் ஒருவரை ஒருவர் அணைத்தும், காத்தும், ஆதரவளித்தும், பாண்டிய நாட்டு அன்றைய முஸ்லிம்கள் போல், தமிழர் என்ற அடையாள உணர்வுடனும் வாழ்வதே முஸ்லிம்களுக்குச் சிறந்த பாதுகாப்பு. பசீரும் ஹக்கீமும் இதை உணர்வார்களாக.

0 Comments:

Post a Comment

<< Home