ஈழத் தமிழர்

Tuesday, October 25, 2005

நம்பிக்கை வரம்புகளை உயர்த்துங்கள்

ஜயதேவா உயங்கொடை
கொழும்புப் பல்கலைக் கழக அரசியல் ஆய்வு மற்றும் பொதுக்கொள்கைத் துறைத் தலைவர்
29.06.2002 சென்னை இந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரை
தமிழில்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேரடி பேச்சுத்தொடர்பு இல்லாததால் அமைதித் தீர்வு காண்பயணத்தில் தேக்கம் உள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டை இந்த ஆண்டின் தொடக்கத்தில் எழுதிய இரு சாராருக்கும் இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையும் பாதிப்படைந்துள்ளது. அமைதி முனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி அமைதியைக் குலைக்க விரும்பும் நச்சுப் பாம்புகள் ஊடுருவத் தொடங்கியுள்ளன. இந் நச்சுப் பாம்புகளின் கைகள் வலுப்பெற்றால் அமைதி முயற்சி தடம்புரளும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும், தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் அமைதி முயற்சிக்கு அரசியல் புத்துயிர் கொடுத்துத் தங்களுக்கிடையே புரிந்துணர்வை மீளமைத்துப் பொது மக்களிடையே நம்பிக்கை வலுவைக் கட்டியெழுப்ப வேண்டும்.
கவனித்துப் பேணாவிட்டால் அமைதி முயற்சி மீள முடியாத குழிக்குள் புதைந்து விடும். பாங்கொக் பேச்சு முயற்சியை அடிக்கடி பின்போட்டு வருவது நல்லதல்ல. வைகாசியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனிக்குப் பின் தள்ளியது. ஆடியில் கூட நடைபெறும் போலத் தோன்றவில்லை.
பாங்கொக் செல்லும் வழிக்கு இரு பெரும் தடைகள் உள்ளன. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க அரசு தயங்குவது முதல் தடை. தடையை நீக்கிய பின்பே அரசுடன் நேரடியாகப் பேசலாம் என்பதுபுலிகளின் நிலை. கொழும்பில் உள்ள சிங்கள எதிர் கட்சிகளின் அழுத்தத்தால் அரசு இதில் ஈடாடுகிறது. பேச்சுக்கு நாட்குறித்துப் பத்து நாள்களுக்கு முன்னதாகத் தடையை நீக்கலாம் என்ற அரசின் கருத்தைப் புலிகள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
பாங்கொக்கில் எதைப் பேசுவது என்பதைப் பற்றியதே இரண்டாவது தடை. வடகிழக்கில் இடைக்கால அரசை (அல்லது) ஆட்சியை அமைப்பது பற்றிப் பாங்கொக்கில் முழுமையாகப் பேசித் தீர்க்கலாம் என்ற புரிந்துணர்வு அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்புவரை இருந்தது. குடியரசுத் தலைவர் சந்திரிகா தலைமையில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. பிரதமர் ரணில் இந்த எதிர்ப்பைச் சமாளிக்கத் தனது நிலையிலிருந்து தடம்புரண்டார். அடிப்படை வேறுபாடுகளை பாங்கொக்கில் பேசுவோம் என்கிறார் இப்பொழுது. பிரதமர் ரணில் ஒரு தலைப்பட்சமாகத் தடம் புரண்டதில் புலிகளுக்கு வருத்தமுண்டு. அமைதி முயற்சி தொடர்பாகக் கடந்த சில வாரங்களாகவே புலிகளின் உயர்மட்டத் தலைமை மௌனமாக இருப்பது அரசுக்கு விடுக்கும் எதிர்மறைச் செய்தி. புலிகளுக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தொடர்பு இடைவெளியே இன்றைய நம்பிக்கைக் குறைவுக்கு அடிப்படை. புலிகள் விடுக்கும் முக்கிய குறிப்புணர்த்தல்களை அரசு மதிக்காமல் உள்ளமையும் இந்த நம்பிக்கைக் குறைவை வலுப்படுத்துகிறது.
மூன்று முக்கிய குறிப்புணர்த்தல்களைப் புலிகள் விடுத்தனர். ஏ9 நெடுஞ்சாலையைத் திறந்தனர். தமது கட்டுப்பாடுள்ள வீதிகள் தோறும் உள்ள கண்ணி வெடிகளை அகற்றினர். இடைக்கால அரசு (அல்லது) ஆட்சியை அமைக்கலாம் என முன்மொழிந்தனர். ஏ9 நெடுஞ்சாலையைத் திறந்தமை, முக்கிய வீதிகளில் கண்ணி வெடியை அகற்றியமை ஆகிய இரண்டும் முக்கிய சலுகைகள். அரசியலாரும், படைவல்லுனரும் வியக்கும் சலுகைகள். வன்னியில் தமது பாதுகாப்பு அரண்களை மலடாக்கி, அரசின் திடீர் தாக்குதலை எதிர்கொள்ளத் திணற வேண்டிய புலிகளின் மிகப் பெரிய சலுகைகள் என்றே இவற்றைக் கருத வேண்டும். 1997 தொடக்கம் ஏ9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றப் பல படையெடுப்புகளை நிகழ்த்தித் தோல்வி கண்டது சந்திரிகா அரசு. இந்த நெடுஞ்சாலையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அதிக விலை கொடுத்து வந்தனர் விடுதலைப் புலிகள். இந்த நெடுஞ்சாலை அரசு கைக்கு மாறினால் புலிகளின் பாதுகாப்பு அரண்கள் பலவீனமாகும். நீண்ட இச்சாலையின் இரு மருங்குகளிலிருந்து அரசுப் படைகள் வன்னிக்குள் ஊடுருவும் வாய்ப்பு அதிகமாகும். புலிகளும் திணற வேண்டியிருக்கும். போர் முனையில் உங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை, பேச்சு முனையில் உங்களைச் சந்திக்க விரும்புகிறோம் எனத் தெளிவாக விடுதலைப் புலிகள் அரசுக்குக் கூறியுள்ளனர். படை வலுவைக் குறைத்து அரண்களை மலடாக்கிப் பேச்சுக்காகப் பல தியாகங்களை செய்துள்ளோம் எனப் புலிகள் உலகுக்கு உணர்த்தி வருவதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை வேறுபாடுகள் பற்றிய சர்ச்சைக்குள் மூழ்கினால் அமைதி விரைவில் கிட்டாது. அரசியலமைப்பு விவாதங்களைக் கிளப்பி விடும். எனவே தான் இடைக்கால அரசு (அல்லது) ஆட்சி பற்றிப் பேசுவது நல்லது. ஆனால், அரசு இந்த வழிக்குப் போக விரும்பவில்லை. இது வியப்பாக இருக்கிறது. பிரபாகரன் நீட்டும் கையைப் பற்றிக் கொள்ளாமல் சிங்களப் பாராளுமன்ற எதிர்க் கட்சிகள் வைத்த பொறிக் கிடங்குக்குள் ரணில் விக்கிரமசிங்கா விழக்கூடும். சிங்கள சமூகத்தின் அரசியல் சக்திகள் இன்றைய நிலையிலும் சரி அடுத்த சில ஆண்டுகளுக்கும் சரி, சிங்கள - தமிழ் பிரச்சனைக்கு அரசியலமைப்பு மூலம் தீர்வு காணக் கொழும்பில் உள்ள எந்த அரசுக்கும் ஒத்துழைப்புக் கொடுக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளுடன் ஏற்படும் ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர அரசியலமைப்பு அடிப்படை மாற்றங்கள் தேவை. நாடாளுமன்றத்தில் மூன்று இரண்டு பெரும்பான்மை இருந்தால்மட்டுமே அரசியலமைப்பை மாற்றலாம். எதிர்க் கட்சியாகச் சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ எந்தக் கட்சி இருந்தாலும் இத்தகைய அரசியலமைப்பு மாற்றத்திற்கு எப்பொழுதும் உடன்படா. கொழும்பு நாடாளுமன்றத்தில் சிங்களவரின் இந்த எண்ணிக்கை விளையாட்டு, தமிழ் இனப் படுகொலைக்கான சாவுடனான விளையாட்டு என்பதை விடுதலைப்புலிகள் நன்கு அறிவார்கள். எனவே தான் இடைக்கால அரசு பற்றிப் பேசுவோம் என்கிறார்கள். 1987இல் இலங்கை - இந்திய உடன்பாடு மற்றும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் என்பனவற்றுக்குள் இடைக்கால அரசை நடத்திக் கொள்ளலாம் என விடுதலைப் புலிகள் கருதுகிறார்கள்.
விக்கிரமசிங்காவின் அரசுக்கு உள்ள அரசியல் அழுத்தங்களை விடுதலைப் புலிகள் சரியான அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். தமிழ் அரசியலாரைப் பிரபாகரன் தன் கட்டுக்குள் வைத்திருப்பதைப் போல சிங்கள அரசியலார் பிரதமர் ரணிலின் கட்டுக்குள் இல்லை. விடுதலைப் புலிகளுடன் அரசியல் உடன்பாடு காண்பதை நேரிடையாக எதிர்க்கும் பல சக்திகள் சிங்கள அரசியலாரிடம் உள்ளன. ஆழப் பிளவுபட்டும் அச்ச உணர்வுடனும் செயற்படும் சிங்களப் பெரும்பான்மை அரசியலார் தம் இன எதிரிகளான தமிழருடன் இணக்கம் காண முடியாமல் உள்ள நிலையை மாற்றும் பகீரதப் பிரயத்தனத்தில் ரணில் விக்ரமசிங்கா இப்பொழுதும், சந்திரிகா இதற்கு முன்பும் தளராது ஈடுபட்டதைப் விடுதலைப் புலிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவுகள் உள்ளதான அறிக்கைகள் விடுதலைப் புலிகளையோ, தமிழீழ நாட்டினத்தையோ சந்தேகப் பிராணிகளாக மாற்றி விடக் கூடாது. உலக அரசியல் அரங்கின் அண்மைய போக்கையும் தெற்கு ஆசியச் சூழ்நிலையையும் விடுதலைப் புலிகளின் உள்வாங்க வேண்டும். பேச்சு முனையிலிருந்து விலகிப் போர் முனைக்கு போவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல.
அமைதி முயற்சி தளர்ந்துள்ளது. அதற்கு வலிமை சேர்க்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியும், விடுதலைப் புலிகளும் புதிதாக அரசியல் கருத்துப் பரிமாற வேண்டும். இது இன்றைய சூழ்நிலையில் உடனடித் தேவையாகும். சிக்கலைத் தீர்ப்பதற்கு அச்சாணியாக விளங்கும் பரஸ்பர நம்பிக்கையும், அரசியல் தொடர்புகளும் கடந்த சில மாதங்களாக மிகக் குறைந்து போயுள்ளன. நார்வேயின் உதவி வரப்பெல்லையைத் தாண்ட வேண்டுமா என்பதையும் எடுத்து நோக்க வேண்டும்.
இரு பகுதியாரும் நார்வேயின் உதவியுடன் தொடர்பாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல் ஆய்வுகளையோ, விளக்கங்களையோ செய்து கொடுக்கும் பணி நார்வேக்கு இல்லை. இன்றைய தடங்கலிலிருந்து விடுபட இரு பகுதியாரும் நார்வேயின் உதவி எல்லையைத் தாண்ட வேண்டும். பாங்காக் பேச்சு வழிமுறையைவிட வேறொரு வழிமுறையை இரு சாராரும் நாடி, நேரடியாகப் பேச வேண்டும். ஏனெனில் பாங்காக் பேச்சு மீண்டும் மீண்டும் பின்போடப்பட்டு வருகிறது.பேச்சுமுனை தான் சாத்தியமானது, ஏற்றது, நடைமுறைக்குரியது என்பதைத் தங்களுக்கும், தங்களின் அரசியலாருக்கும்இருபகுதியாரும் நியாயப்படுத்த வேண்டும். இதற்காக இப்பொழுது இருக்கும் வரம்புகளைத் தாண்டிப் புதிய வரம்புகளை இருபகுதியாரும் அமைத்துக்கொள்ள வேண்டும். புதிய வரம்புகளை எந்த அளவில் கட்ட வேண்டும் என்பதையும், தங்களுக்குள் எவ்வளவு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் இருபகுதித் தலைவர்களும் அவரவர்களுடைய ஆலோசகர்களும் மட்டுமே தீர்க்கலாம். குடிமக்களாகிய நாம் நம்பிக்கையைத் தளர விடாமல், எதுவும் நடக்கலாம் என்ற ஏக்கத்துடன் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

0 Comments:

Post a Comment

<< Home