ஈழத் தமிழர்

Wednesday, October 26, 2005

சிங்களவரின் எதிர்காலம் சிறக்கவேண்டும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிங்களவருக்கு உலகில் ஒரேயொரு நாடுதான் உண்டு. வேறெந்த நாட்டிலும் சிங்களவர் சிறுபான்மையினராகக் கூட இல்லை. இலங்கைத் தீவில் தெற்கு, தென்மேற்குப்பகுதிகளே சிங்களவரின் மரபுவழித்தாயகம்.
சிங்களவர் தமது மரபுக்குரிய சமயமாகப் புத்தத்தைக் கொள்கின்றனர். சிங்கள - புத்த என்ற தொடர்தான் அவர்களின் இனத்தைக் குறிப்பதாகவும் கருதுகின்றனர்.
தேரவாத புத்தத்தின் காவலர்கள் தாங்களே என்றும், புத்தரின் ஆணையே அதுவென்றும் வரலாறு எழுதி வைத்திருப்பவர்கள்.
தென்னிந்திய, இலங்கைப் பகுதிகளில் உள்ள எந்த இனத்துக்கும் இல்லாத வரலாற்றுப் பதிவுகளைச் சிங்களவர், அட்டகதை, தீபவமிசம், மகாவமிசம், ராஜவழி, பூஜாவழி, சூளவமிசம் ஆகிய நூல்களாக ஏடுகளில் எழுதி வைத்துள்ளனர். புத்தர் பிறந்த ஆண்டிலிருந்து இந்த வரலாறு, தொடர்ச்சியாக இவற்றுள் ஏதாவது ஒரு நூலுள் இருக்கும். தெளிவான நிகழ்ச்சிகள்; அந்த நிகழ்ச்சிகளைச் சுற்றி அலங்காரங்களும் அற்புதங்களும் நிறைந்த பின்னணிகள்; காலவரையறைக் குழப்பங்கள்; எனினும், ஒரு அசைக்கமுடியாத அடித்தளம். அந்த அடித்தளத்தின் பிரதிபலிப்பே அவர்களின் அரசியல் வெளிப்பாடு.
தமிழ்நாட்டிலிருந்து தொடர்ச்சியான படையெடுப்புகள். கி. பி. 113 - 135 காலப் பகுதியில், கரிகாலச் சோழன் இலங்கையுடன் போர்தொடுத்ததும் 12,000 சிங்களவரைச் சிறைப்பிடித்ததும், காவிரியைத் தடுத்துக் கல்லணை எழுப்பியதும் தமிழரின் வீரவரலாறாக இருக்கலாம். ஆனால் அது சிங்கள இனத்திற்கு மாறாத வடு. மறந்துவிட முடியாமல், சமூக உள்ளத்தின் ஆழத்தில் சிறிய கீறல்களாயும் பாரிய வடுக்களாயும் சிங்களவரை உறுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய படையெடுப்புகள் பற்பல.
தமிழர் என்றாலே படையெடுப்பவர், புத்த - சிங்கள இனத்தைப் பூண்டோடு அழிக்க நினைப்பவர் என்ற ஆழப் புதைந்த கண்ணோட்டமே சிங்களவரின் அரசியல்.
இதனால், பாதுகாப்பின்மை உணர்வில் தத்தளிப்பவர் சிங்களவர். தெற்கே எல்லை காணாக் கடல், வடக்கே படையெடுத்துவரும் தமிழர், புத்த - சிங்களவருக்கு ஏது வாழ்வு? என கி.மு. 161இல் துட்டகைமுனு கேட்ட அதே வினாவைச் சிங்கள உறுமல் கட்சி இன்று சந்திரிகாவையும் ரனிலையும் பார்த்துக் கேட்கிறது.
கி. பி. 1915இல் முஸ்லிம்களுடன் மோதல், 1939இல் மலையாளிகளுடன் மோதல், 1947இல் மலையகத் தமிழருடன் மோதல், 1956 முதலாக ஈழத்தமிழருடன் மோதல் எனச் சிங்கள- புத்த இனத் தற்காப்பு முயற்சியே ஆங்கிலேயர் ஆட்சியிலும் பின்னரும் சிங்களவரை வன்முறையாளராக்கியது.
புத்தர் பெருமான் கருணையைப் போதித்தார், பொறுமையைப் போதித்தார், வன்முறை அறவே வேண்டாம் என்றார். புத்த - சிங்கள இனப் பாதுகாப்புக்காகச் சிங்களவர் கருணையைக் கைவிட்டனர், பொறுமையைப் புறந்தள்ளினர், வரலாற்றினூடாக வன்முறையை வாழ்வாக்கிக் கொண்டனர்.
கி. பி. 915இல் பராந்தக சோழனுக்கும் இராஜசிம்ம பாண்டியனுக்கும் மோதல். சிங்களப் படை பாண்டியனுக்குத் தோள் கொடுக்க வந்தது. வெள்ளூர்ப் போரில் இரு படைகளையும் சோழன் வீழ்த்திய பொழுது, இராஜசிம்மன் இலங்கைக்குத் தப்பி ஓடினான்; அநுராதபுர அரசிடம் தன் முடி, செங்கோல், அரியணை முதலாம் அரசணிகளை அடைக்கலமாகக் கொடுத்தான். பராந்தகனின் பின்னர் இராஜராஜன் கி. பி. 992இல் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றினான். அதன்பின்னர் இராஜேந்திரன் இலங்கை முழுவதையும் கி. பி. 1017இல் கைப்பற்றியதுடன் பாண்டிய அரசணிகளையும் மீட்டுவந்தான். 82 ஆண்டுகாலம் சோழ மன்னர் எழுவர் இலங்கையை மும்முடிச்சோழ மண்டலம் என ஆட்சிசெய்தனர்.
வெள்ளூர்ப்போரில் சிங்களப் படை தலையிட்டதாலும் பாண்டிய அரசணிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாலும் சோழப் படையெடுப்பைச் சிங்களவரே அழைத்தனர் என்று சொல்லலாம்.
இவ்வாறாகக் காலத்துக் காலம் சிங்களவர் செய்த அரசியற் கணக்கீட்டுத் தவறுகளே அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பாழாக்கின. துட்டகைமுனு தொடக்கம், தப்புலன், மகிந்தன் ஊடாக, சேனநாயக்கா - பண்டாரநாயக்கா காலம் வரை தொடர்ச்சியாக, பாதுகாப்பின்மைக் கண்ணோட்டத்திலும் புத்த - சிங்கள மேலாட்சிக் கண்ணோட்டத்திலும் செய்த தவறுகள், தமிழரைப் பகைவராக்கின. இதனால் சிங்களத் தாயக வளர்ச்சியைப் பேணமுடியவில்லை.
கி. பி. 1949இன் பின் காந்திய வழிகளில் 40 ஆண்டுகாலம் ஈழத்தமிழர் தம் உரிமைகளை நிலைநாட்ட நடத்திய போரட்டங்களின் உட்கருத்துகளைச் சிங்களவர் புரிந்துகொள்ள முயலவில்லை.
முதலில் அறப்போரில் 1949ஆம் ஆண்டில் ஈடுபட்ட தொண்டமான் தலைமையிலான மலையகத் தமிழரின் உரிமைகளைச் சிங்களவர், 2003ஆம் ஆண்டுவரை வரை புறக்கணித்தனர். அண்மையில், 2003இல்தான் மலையகத் தமிழரின் குடியுரிமைச் சிக்கல் முழுமையாகத் தீர்ந்தது. எனினும் அவர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்கள் இன்னமும் தீரவில்லை.
கி. பி. 1956 முதலாக தந்தை செல்வநாயகம் தலைமையில் ஈழத் தமிழர் அறப்போரில் ஈடுபட்டனர். சிங்களத் தலைமையோ அறப்போர்த் தீவிரத்தைத் தவிர்க்கத் தமிழருடன் ஒப்பந்தங்கள் (1958, 1965) எழுதும். மைகாயு முன்பு ஒப்பந்தத்தைக் கிழித்துவிடும். ஒரு தலைமை கொடுப்பதை மற்றத் தலைமை எதிர்ப்பது, மாறி மாறி எதிர்ப்பது, அவ்விரு தலைமைகளுக்குமிடையே உள்ள உடன்பாடு. 1971 வரை தமிழரின் அறப்போரைத் தவிர்க்க இந்த ஏமாற்று வழிகளைச் சிங்களவர் கையாண்டனர். அரச வன்முறைமூலம் பலமுறை (1956, 1958, 1961, 1964, 1971, 1974) அறப்போர்களை நசுக்கினர். பொறாத் தமிழ் இளைஞர் வன்முறைக்கு மாறினர்; போராளிகளாயினர். சிங்களப் படைகள் சமாளிக்க முடியாத பெரும் சவாலாகவே போராளிகளின் வலிமை இன்று உள்ளதாக ரனில் கருதிப் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு வந்துள்ளார்.
போர் சூழ்ந்த கடந்த இருபது ஆண்டுகளாக இலங்கைத் தீவு கடும் பொருளாதாரச் சீரழிவை எதிர்கொண்டு வருகிறது. தமிழரின் மரபுவழித் தாயகம் சுடுகாடாயது. சிங்களவரின் மரபுவழித் தாயகத்தை வறுமை ஆட்கொண்டது. தமிழரின் வளங்கள் முழுவதும் போர்க்களத்தில் அழிந்தன. சிங்களவரின் வளங்கள் போர்தொடுத்ததால் மாய்ந்தன.
இதனால் இருள் சூழ்ந்த எதிர்காலம் சிங்களவருக்கு வந்துவிடும் அபாயம் மேலோங்கி உள்ளது. சந்திரிகாவும் ரனிலும் இணைந்துதான் இந்த இருண்ட எதிர்காலத்துக்கு வழிவகுக்கிறார்கள் எனத் தெரிகிறது. வன்முறையை ஏவித் தமிழரைப் போருக்கு மீண்டும் அழைத்தால் சிங்கள இறைமைக்கு முன்பு போல் பங்கம் நேரும்.
பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்பாட்டை நிறைவு செய்திருந்தாலே சிங்கள மக்களுக்கு இக்கதி நேர்ந்திருக்காது. 1958இல் இவ்வுடன்பாட்டைச் சிங்களவர் மனமொப்பி ஏற்றிருப்பின், கி. பி. 1915இல் ஆங்கிலேயேரிடமிருந்து சிங்களத் தலைவர்களைக் காத்த சேர் பொன்னம்பலம் இராமநாதனைப் போன்று, சிங்களவரின் நன்மையைத் தமிழர் தொடர்ந்தும் பேணியிருப்பர்.
சேனநாயக்கா, ஜெயவர்தனா வழிவந்தவர் ரனில். பண்டாரநாயக்கா வழிவந்தவர் சந்திரிகா. முன்னோர் விட்ட பிழைகளால் நேர்ந்த பின்னடைவுகளை உளத்திருத்தாது, அவர் வழியேசென்று, சிங்கள மக்களின் எதிர்காலத்தை இவ்விருவருமாகப் பாழ்படுத்திவிடுவர் போலத் தோன்றுகிறது. 1972இல் சிங்களவர் இறைமையைத் தமதாக்கினர். இந்தியப் படைத் தலையீட்டுக்கு ஜெயவர்த்தனா காரணர். பிரேமதாசா காலத்தில் இந்தியா பின்வாங்கியதும் நோர்வேயை அழைத்தவர் சந்திரிகா. இவ்விரண்டும் சிங்கள இறைமைக்கு ஏற்பட்ட ஓட்டைகள்.
துட்டகைமுனு செய்த தவறுகள், தப்புலனும் மகிந்தனும் செய்த தவறுகள் வரலாறு கற்பிக்கும் சில பாடங்கள். அதனால் சிங்களவருக்கு ஏற்பட்ட அநீதியை, ஆழ்ந்த வடுக்களை அவர்கள் உளத்திருத்த வேண்டும். சிங்களவருக்கு இலங்கைத் தீவின் தெற்கு, தென்மேற்குப் பகுதிகளை விட்டால் நாடே இல்லை. அவர்கள் அங்கு வளமாக வாழ்வதை உறுதிசெய்வது ஈழத் தமிழரின் கடமை மட்டுமல்ல, மனிதநேயமிக்க அனைவரின் கடமையாகவேண்டும்.
காலம் மாறிவிட்டது. போர் அநாகரீகமாகிவிட்டது. உலகம் முழுவதும் மனிதாபிமானம் வளர்ந்து, புத்தர் போதித்த அன்பு, அறன், அருள் யாவும் மனித உடைமையாகி வருகின்றன. இதை இலங்கைத் தீவில் போர்புரியும் இரு தரப்பினரும் உணராவிட்டால், சிறப்பாக, அரச வன்முறையைத் இடையீடின்றிக் கட்டவிழ்த்துவிடும் அரசுத் தலைமைகளை மாறிமாறித் தெரிவுசெய்யும் சிங்கள மக்கள் உணராவிடின், எழில் கொஞ்சும் அந்தத் தீவு உலகின் ஏளனத்துக்குரியதாகும். சிங்களவரின் வாழ்வு மீண்டும் இருள்சூழ்ந்ததாகிவிடும்.
சிங்களப் பகுதிகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர், சிறப்பாகக் கொழும்பில் வாழ்கின்ற ஈழத் தமிழர் இதைக் கவனத்தில் கொண்டு தமிழர் தாயகத்துக்கு மீண்டுவிடவேண்டும். கொழும்பு மேயராக, அட்டணி ஜெனரலாக, நீதியரசராக, பிரதமரின் ஆலோசகராக, குடியரசுத் தலைவரின் ஆலோசகராக, மூத்த அரசுப் பதவியாளராக, சிங்களவர் வகிக்கவேண்டிய பதவிகளை, இன்றுவரை இக்கொழும்புத் தமிழரும் வகிப்பதால், புத்த - சிங்களத் தீவிரவாதத்துக்குத் தீனிபோடுகிறார்கள்; சிங்களவரின் வன்முறை விடாய்க்குத் தண்ணீராகின்றனர்; ஈழத்தமிழரின் எதிர்காலத்தையும் பாழடிக்கின்றனர். தமிழர் தாயகத்தில் தனியாட்சியும் வேண்டும், சிங்களர் தாயகத்தில் பதவிச் சுகங்களும் வேண்டும் எனத் தன்னலவாதிகளாகச் சிங்களப் பகுதிகளில் வாழும் ஈழத்தமிழர்கள், தம் போக்கிலுல்ள கடுமையான முரண்பாட்டைக் கவனத்தில் கொண்டு, சிங்களவரின் எதிர்காலம் சிறப்பதற்காகச் சிங்களத் தாயகத்தை விட்டு வெளியேறவேண்டும்.
சிங்களத் தாயகத்தில் வாழும் மலையகத்தமிழர் தம் எதிர்கால வளம்பெருகுவது தொடர்பாக இப்பொழுதிருந்தே சிங்களவருடன் பேசுவது நன்று. சிங்களவர் உரிமைகள் பாதிப்படையாது மலையகத் தமிழர் தம் உரிமைகளைப் பேணவேண்டும். சிறப்பான வாழ்வை அடையாளங்கள் கெடாது அங்கேயே அமைக்கவேண்டும். அல்லது தமிழர் தாயகப் பகுதிக்குப் பெயர்ந்துவிடவேண்டும்.
தமிழர் தாயகத்தைச் சிங்களமயமாக்க, அரசு குடியேற்றிய சிங்களவரும் தத்தம் பகுதிகளுக்கு மீள்வதும் தமிழர் தாயகத்தில் தமிழருக்கே வாய்ப்புகளைப் பெருக்குவதும் சிங்களவருக்கே நன்மை பயக்கும். அமைதி வாழ்வை, அற நெறியை, அன்புப் பெருக்கத்தை, அருள் வளத்தை விழைவோர் அனைத்து மனிதரின் நன்மையை விழைவர். இலங்கைத் தீவில் உண்மைப் புத்தராகச் சிங்களவர் சிறந்து வாழ்ந்தால், தமிழரும் சிறக்க வாழ்வர்.

0 Comments:

Post a Comment

<< Home